மகளிர் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி


மும்பை : இந்திய மகளிர் கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி மற்றும் கேப்டன் மிதாலி ராஜ் நேற்று புதிய சாதனையை செய்துள்ளனர்.

இந்திய மகளிர் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா, இலங்கையை வீழ்த்தியது.

இந்த போட்டியில் கேப்டன் மிதாலி ராஜ் பங்கேற்றதன் மூலம், மகளிர் கிரிக்கெட்டில் உலகளவில் அதிக முறை ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் என்ற பெருமையை பெற்றார்.

இவர் நேற்று கேப்டனாக 118வது ஒருநாள் போட்டியில் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் 117 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக ஆடியதே சாதனையாக இருந்தது.

மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் இருக்கிறார். அவர் 101 போட்டிகளில் தலைமை ஏற்று அணியை வழிநடத்தி உள்ளார்.

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமை பெற்ற இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 300 விக்கெட்களுக்கு மேல் குவித்துள்ளார்.

இவர் டெஸ்ட் போட்டிகளில் 40, ஒருநாள் போட்டிகளில் 205 மற்றும் டி20 போட்டிகளில் 56 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

முன்னதாக, இவர் ஒருநாள் போட்டிகளில் எடுத்த 200 விக்கெட்கள் என்ற சாதனையும் பெரியளவில் பேசப்பட்டது. இவர் சமீபத்தில், டி20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார்.

Have a great day!
Read more...

English Summary

Jhulan Goswami and Mithali Raj crossed new career acheivements.