முரளி விஜய்க்கு ஒரு நியாயம், தவானுக்கு ஒரு நியாயமா? சீக்கிரம் வீட்டுக்கு அனுப்புங்க


மும்பை : இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 1-4 என தோல்வி அடைந்து நாடு திரும்ப உள்ளது.

இந்திய அணி நிர்வாகம் கடும் பின்விளைவுகளை சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் வேளையில், சரியாக ரன் குவிக்காத சில பேட்ஸ்மேன்கள் தலையும் உருளும் என தெரிகிறது.

அதிலும் துவக்க வீரர் ஷிகர் தவான் நிச்சயம் தன் மோசமான செயல்பாடுகளுக்காக அணியில் இருந்து நீக்கப்படுவார் என இப்போதே பேச்சுக்கள் கிளம்பி உள்ளது.

தவான் அடித்த ரன்கள்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நன்றாக ரன் குவிக்காமலும் அதிக வாய்ப்பு பெற்ற ஒரே துவக்க வீரர் தவான் தான். முரளி விஜய் இரண்டே போட்டிகள் நன்றாக ஆடவில்லை என முத்திரை குத்தப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். தவான் நான்கு போட்டிகளில், எட்டு இன்னிங்க்ஸ்களில் எடுத்த ரன்கள் இதோ - 26, 13, 35, 44, 23, 17, 3, 1. இந்த தொடரில் தவானின் சராசரி 2௦.25.

பொறுமை இல்லை

தவான் செய்யும் பெரிய தவறு, தன் ஆட்ட பாணியை மாற்றிக் கொள்ள தயாராக இல்லாததுதான். அவர் ஸ்விங் ஆகி வரும் பந்துகளை அடிக்க முயல்கிறார். சில சமயம் அது வேலை செய்கிறது. சில சமயம் விக்கெட் போய் விடுகிறது. இவரது பலவீனத்தை புரிந்து கொண்ட எதிரணி, அதற்கேற்றது போல பந்து வீசி தவானை வீழ்த்துகின்றனர். ஆசிய கண்டத்தில் பந்து அதிகம் ஸ்விங் ஆகாது. அங்கே இவர் பேட்டிங் யுக்தி வேலை செய்கிறது. ஆசிய கண்டத்தில் இவரது சராசரியும் அதிகம். இந்தியாவிலும், ஆசிய கண்டத்திலும் நன்றாக ரன் குவிக்கும் தவான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தடுமாறி வருகிறார்.

வயதாகிறது

தவானுக்கு சில மாதங்களில் 33 வயதாகப் போகிறது. தற்போது ராகுல் சில காலம் வரை இந்திய டெஸ்ட் அணியில் நீடிக்க வாய்ப்புள்ளது. அவரது வயது 26. மற்றொரு துவக்க வீரர் வாய்ப்புக்கு காத்திருக்கும் ப்ரித்வி ஷா 20 வயது கூட ஆகாதவர். ஏற்கனவே, அதிக வாய்ப்பு பெற்றுவிட்ட தவான், தன் தோல்வியை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். இளம் வீரர்களுக்கு வழி விட்டுத்தான் ஆக வேண்டும்.

முரளி விஜய்க்கு ஒரு நியாயம்..

அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தவானுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தால், இந்திய சூழ்நிலையில் அவர் நன்றாகவே ஆடுவார். அதன் மூலம் மீண்டும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் வாய்ப்பு பெறுவார். மீண்டும் அங்கே இதே பிரச்சனை தொடரும். மேலும், ஆப்கன் டெஸ்டில் சதம் அடித்த முரளி விஜய் அடுத்த இரண்டு டெஸ்டில் ரன் எடுக்கவில்லை என நீக்கப்பட்டார். இப்போது தவானுக்கு மேலும் வாய்ப்பு கொடுத்தால், நியாயமாக விஜய்க்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். மாயன்க் அகர்வால் முதல் தர போட்டிகளில் ரன் மேல் ரன் குவித்து எனக்கு ஏன் இந்திய அணியில் இடம் இல்லை என பரிதாபமாக கேட்டுக் கொண்டு இருக்கிறார். அவருக்கும் பதில் சொல்ல வேண்டும்.

Have a great day!
Read more...

English Summary

Shikar Dhawan failed to show his performance in england. Will he get another chance in test