காமன்வெல்த், ஆசிய போட்டிகளில் அதிக பதக்கம் வெல்லும் ஹரியானா… காரணம் என்ன?


டெல்லி : சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 69 பதக்கங்கள் வென்றது. அதில் 18 பதக்கங்கள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் வென்றனர். இன்னும் சொல்லப்போனால், இந்தியா வென்ற 15 தங்கப் பதக்கங்களில், ஐந்து இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் வென்றது தான்.

2010 காமன்வெல்த்தில் இந்தியா வென்ற 101-இல் 27 பதக்கங்கள், 2014 காமன்வெல்த்தில் இந்தியா வென்ற 64இல், 19 பதக்கங்கள் என வென்று அசத்தியுள்ளது ஹரியானா.

பொருளாதாரத்தில், கல்வியில், வேலைவாய்ப்பில் ஹரியானாவை விட அதிகம் முன்னேறிய மாநிலங்கள் கூட விளையாட்டுத் துறையில் தடுமாறி வரும் நிலையில், ஹரியானா அதில் சாதித்து வரும் ரகசியம் என்ன?

ராணுவமும், விவசாயமும் செய்த மாற்றம்

ஹரியானா மாநிலத்தில் விவசாயம் தான் முக்கிய தொழில். மேலும், அந்த மாநிலத்தின் மக்கள் தொகையை வைத்துப் பார்த்தால் அதிக மக்கள் ராணுவத்தில் பணியாற்றுகிறார்கள். விவசாயம் பார்க்கும் மக்கள் இயல்பிலேயே உறுதியான உடல் அமைப்பை கொண்டு இருக்கிறார்கள். அதோடு, ராணுவ பயிற்சிகளில் ஈடுபட தங்கள் உடல் திறனை வளர்த்துக் கொள்ளும் வாலிப வயதினர் விளையாட்டுத் துறைக்குள்ளும் ஈர்க்கப்படுகிறார்கள். இந்த மாநிலத்தில் இருந்து பதக்கம் வென்றவர்கள் பட்டியலை ஆரம்பம் முதல் கவனித்தாலே, ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் அதிகம் இருப்பதை பார்க்கலாம்.

பதக்கமாக மாறும் பாரம்பரிய மல்யுத்தம்

ஹரியானா மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டுக்களில் மல்யுத்தமும் ஒன்று. இந்தியாவின் பல பகுதிகளிலும் அந்த விளையாட்டு மறைந்துவிட்ட நிலையில், பாரம்பரிய மல்யுத்தம் ஹரியானாவில் தொடர்ந்து வளர்க்கப்பட்டு வந்தது. தொழில்முறை மல்யுத்தம் சற்றே வித்தியாசமாக இருக்கும். அதற்கேற்ப அந்த மாநில வீரர்கள் பயிற்சி பெற்று இன்று மல்யுத்தத்தில் கோலோச்சி வருகின்றனர். அதே போல, குத்துச்சண்டையும், மல்யுத்தத்தை போன்ற விளையாட்டு என்பதால், அதிலும் வீரர்களை ஈடுபட வைத்துள்ளனர் அங்குள்ள பயிற்சியாளர்கள். அதன் பலனாக, மல்யுத்தம், குத்துச்சண்டை இரண்டிலும் அந்த மாநிலம் இந்தியாவிலேயே முன்னிலையில் உள்ளது.

பணமும், பதவியும்

வீரர்கள் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறார்கள். பயிற்சி பெறுகிறார்கள். ஆனால், ஹரியானா மட்டும் பதக்கம் வெல்லும் ரகசியம் என்ன? பணம் பத்தும் செய்யும் என்பார்கள். அந்த மாநிலத்தில் விளையாட்டுக்களில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு அதிக பணம் மற்றும் நிச்சய பதவி அளிக்கப்பட்டு வருகிறது. 2000க்கு முன்பு வரை அந்த மாநிலத்தில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ஆயிரங்களில் தான் பணப் பரிசு வழங்கப்பட்டது. அதை மாற்றி 2000 சிட்னி ஒலிம்பிக் போட்டிகள் முதல், லட்சங்களிலும், கோடியிலும் பரிசு வழங்கப்பட்டது. இப்போது கூட ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றவர்களுக்கு 3 கோடி, வெள்ளி வென்றவர்களுக்கு 1.5 கோடி மற்றும் வெண்கலம் வென்றவர்களுக்கு 75 லட்சம் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.

சர்ச்சையும் உண்டு

மேலே கூறிய காரணங்களால் தான் ஹரியானா விளையாட்டுத் துறையில் முன்னணியில் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, இந்த ஆண்டு இதே அரசு சர்ச்சைக்குரிய ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், அரசு வேலையில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் மூன்றில் ஒரு பங்கு பரிசுத் தொகைகளை அரசு விளையாட்டு நிதிக்கு வழங்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. பின்பு, அந்த உத்தரவு பின்வாங்கப்பட்டது.

Have a great day!
Read more...

English Summary

How Haryana won more medals in Asian Games 2018?