ஐதராபாத்: மிகவும் பரபரப்பாக நடந்த பைனலில் வென்று, பிரீமியர் பாட்மின்டன் லீக் மூன்றாவது சீசனின் சாம்பியன் பட்டத்தை வேட்டையாடியது ஐதராபாத் ஹண்டர்ஸ் அணி. பைனலில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியை 4-3 என்ற கணக்கில் வென்றது ஐதராபாத் ஹண்டர்ஸ்.
கிரிக்கெட்டில் ஐபிஎல் போட்டிகள் போல, பாட்மின்டன் விளையாட்டில் பிரீமியர் பாட்மின்டன் லீக் போட்டிகள் நடந்து வருகின்றன. முதல் சீசனில் டெல்லி ஏசர்ஸ் அணியும், கடந்தாண்டு சென்னை ஸ்மாஷர்ஸ் அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றன.
மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற மூன்றாவது சீசனின் பைனல்ஸ் ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் ஐதராபாத் ஹண்டர்ஸ் அணியும், பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியும் மோதின.
மிகவும் பரபரக்கான நடந்த இந்தப் போட்டியில், ஒரு நிலையில், இரு அணிகளும் 3-3 என்று சமநிலையில், இருந்தபோது, கடைசியாக நடந்த கலப்பு இரட்டையரில் உள்ளூர் வீரரான ஸ்வஸ்திக்ராஜ் ராங்கிரெட்டி, பியா ஜெபாதியா பெர்னாடெட் உடன் இணைந்து வென்று, அணிக்கு முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று தந்தார்.
லீக் போட்டியின்போது, இரு அணிகளும் மோதியபோது, ஐதரபாத் ஹண்டர்ஸ் ஒயிட்வாஷ் செய்தது. ஆனால், பைனலில் அதற்கு வாய்ப்பு இல்லை என்பது, பெங்களூரு அணிக்காக உலகின் நம்பர் 1 வீரர் விக்டெர் அக்சல்சன் பைனலில் களமிறங்கியபோது தெரிந்தது.
அதே நேரத்தில் லீ ஹூவான் இல், கரோலினா மரின் களமிறங்கியதால், ஐதராபாத் ஹண்டர்ஸ் அணி பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப இவ்விருவரும் தங்களுடைய ஆட்டங்களில் வென்றனர். அக்சல்சனும் வென்றார். ஆடவர் இரட்டையரிலும் பெங்களூரு வென்றது.
இதனால், இரு அணிகளும் 3-3 என்ற சம நிலையில் இருந்த நிலையில், கடைசியில் கலப்பு இரட்டையர் நடந்தது. இதில் 15-11, 15-12 என்று வெற்றி பெற, ஐதராபாத் ஹண்டர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.