
கடக்நாத் கோழி
கருப்பு நிறத்தில் காணப்படும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த கடக்நாத் கோழி, கருங்கோழி, கருங்கால் கோழி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வகை கோழி கிடைப்பது மிகவும் அரிது. இதன் விலையும் அதிகம். இந்தியா முழுவதும் இந்த கோழிக்கு பெரும் தேவை உள்ளது.

தோனிக்கு பிடித்த சிக்கன்
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த தோனிக்கு இந்த பாரம்பரியம் மிக்க கோழி என்றால் மிகவும் பிடிக்கும் என பலமுறை கூறப்பட்டுள்ளது. இந்த கோழியின் சிறப்பம்சங்கள் தான் அதற்கு காரணம். இந்த நிலையில் தோனியின் பண்ணை வீட்டை சேர்ந்த ஊழியர்கள் இந்த கோழியை தேடி அலைந்துள்ளனர்.

2000 கோழிக்கு முன்பணம்
ஒன்றிரண்டு கருங்கோழிக்காக அல்ல. மொத்தம் 2000 கருங்கோழி வேண்டும் என தேடி உள்ளனர். பின்னர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவரை பிடித்து 2000 கருங்கோழியை ராஞ்சிக்கு அனுப்பி வைக்குமாறு தோனி சார்பாக முன்பணமும் அனுப்பி வைத்துள்ளனர்.

ஏன் இத்தனை கோழி?
தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிய பின் தன் பண்ணை வீட்டில் தான் தங்கி உள்ளார். அங்கே இயற்கை முறை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக அரிதான நாட்டுக் கோழி வகையான கருங்கோழியை பண்ணை முறையில் வளர்க்க அவர் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மகிழ்ச்சியில் விவசாயி
வினோத் மேதா என்ற மத்திய பிரதேச மாநில, ஜாபுவா மாவட்ட விவசாயியிடம் தான் தோனி கோழிகளை வாங்க உள்ளார். டிசம்பர் 15க்குள் 2000 கருங்கோழிகளை ராஞ்சிக்கு அனுப்பி வைக்குமாறு அவருக்கு ஐந்து நாட்களுக்கு முன் முன்பணம் செலுத்தி இருக்கிறார் தோனி.

இரண்டரை மாத தேடல்
இந்த கோழிகளை வாங்க தோனியின் அதிகாரிகள் கடந்த இரண்டரை மாதமாக முயற்சி வந்தனராம். ராஞ்சி கால்நடை கல்லூரியில் துவங்கி, க்ரிஷி விக்யான் கேந்திரா எனும் அரசு விவசாய நிறுவனம் வரை விசாரணை செய்து, கருங்கோழிக்கான தேவை அதிகமாக இருந்ததால் காத்திருந்து தற்போது முன்பணம் செலுத்தி உள்ளனர்.

குறைந்த கொழுப்பு, நிறைய புரதம்
தோனி இத்தனை கருங்கோழிகளை வாங்கியதால் அந்த கோழி குறித்து பலரும் தேடி வருகின்றனர். கருங்கோழிகள் சாதாரண நாட்டுக் கோழிகளை விட குறைந்த கொழுப்பு கொண்டது. அதிகா புரதச் சத்து நிறைந்தது. அதில் மருத்துவ குணங்களும் இருப்பதால் தான் அதற்கு தேவை அதிகமாக இருக்கிறது.

மத்திய பிரதேச கோழி
இதில் மற்றொரு சுவாரசியமாக மத்திய பிரதேச மாநிலத்துக்கும், சத்தீஸ்கர் மாநிலத்துக்கும் இந்த கோழி யாருக்கு சொந்தம் என்ற மோதல் நடந்துள்ளது. அதன் முடிவில் மத்திய பிரதேசம் ஜாபுவா மாவட்டத்தை சேர்ந்தது தான் உண்மையான கருங்கோழி என பதிவு செய்துள்ளது அந்த மாநிலம்.