நிதாஸ் ட்ராபி நாயகன்
தோனி இந்திய அணியில் கோலோச்சிய காலத்தில் அணியில் இடம் பெற முடியாத நிலையில் இருந்தார் தினேஷ் கார்த்திக். 2018இன் துவக்கத்தில் நடைபெற்ற நிதாஸ் ட்ராபி தொடரில் கடைசி ஓவர் ஆட்டத்துக்குப் பின் தான் தினேஷ் கார்த்திக் அணியின் முக்கிய வீரர் என்ற பெயரைப் பெற்றார்.
டி20 வீரர்
தன்னை சிறப்பு டி20 பினிஷராக மாற்றிக் கொண்ட தினேஷ் கார்த்திக் ஐபிஎல் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் தான் ஆடிய அணி வெற்றிகள் பெற முக்கிய காரணமாக இருந்தார்.
அணியில் வாய்ப்பு
அப்படி இருந்தும் தினேஷ் கார்த்திக் ஒருநாள் மற்றும் டி20 அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெறவில்லை. சில தொடரில் அவர் இருப்பார். சில தொடர்களில் அவர் இருக்க மாட்டார்.
உலகக்கோப்பை சொதப்பல்
கடந்த ஆண்டு முதல் உலகக்கோப்பை தொடர் வரை இது தான் நிலைமை. இந்த நிலையில், 2019 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக இந்திய அணியில் இடம் பெற்றார். இரண்டு போட்டிகளில் ஆட வாய்ப்பு பெற்ற தினேஷ், 14 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
வாய்ப்பு இல்லை
அத்துடன் அவருக்கு ஒருநாள் அணியில் அணியில் வாய்ப்பு கிடைக்காது என்றே கருதப்பட்டது. உலகக்கோப்பை தொடருக்குப் பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க டி20 தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்திய அணி இளம் வீரர்களை நோக்கி தன் கவனத்தை திருப்பியது.
ஹசாரே தொடர் அதிரடி
இந்த நேரத்தில் தினேஷ் கார்த்திக் இந்திய அளவிலான ஹசாரே தொடரில் ஆறு இன்னிங்க்ஸ்களில் 349 ரன்கள் குவித்து மிரட்டி இருக்கிறார். அவரது சராசரி 87.25 மற்றும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 135.
நாக் அவுட் சென்ற தமிழ்நாடு
அவரது ஆட்டத்தால் தமிழ்நாடு அணி ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்று ஹசாரே தொடரில் நாக் - அவுட் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த நிலையில், தன் சிறப்பான ஆட்டத்தைக் காட்டி மீண்டும் டி20 அணியில் வாய்ப்பு கேட்டுள்ளார் தினேஷ் கார்த்திக்.
டி20 உலகக்கோப்பைக்கு குறி
டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. இருந்தாலும், நான் தொடர்ந்து சிறப்பாக ஆடினால், உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டால், நான் நிச்சயம் உலகக்கோப்பை சென்று ஆடுவேன் என்றார் தினேஷ் கார்த்திக்.
அணியில் இருந்து நீக்கிவிட்டார்கள்
இந்திய அணிக்காக சில காலம் டி20யில் ஆடி இருக்கிறேன். ஆனால், உலகக்கோப்பைக்கு பின் நான் ஆடவில்லை. அவர்கள் உலகக்கோப்பையுடன், டி20யையும் இணைத்து, என்னை அணியில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்றார்.
தோனி போல ஆடுவேன்
மேலும், தோனி பல ஆண்டுகளாக என்ன செய்தாரோ, அதற்கு நான் பொருத்தமாக இருந்து செய்ய முடியும் என நினைக்கிறேன். அதை நான் தமிழ்நாடு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு செய்துள்ளேன். அதனால், அணியில் ஏதேனும் இடம் இருந்தால் அதை நிச்சயம் நான் எதிர்பார்க்கிறேன். டி20 உலகக்கோப்பையில் நான் நிச்சயம் ஆட விரும்புகிறேன் என்றார் தினேஷ் கார்த்திக்.
வாய்ப்பு கிடைக்குமா?
இந்திய அணியில் தற்போது ரிஷப் பண்ட் சரியாக ஆடாத நிலையில், அவருக்கு மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை. அதை மனதில் வைத்து தான் தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார். வங்கதேச தொடருக்கான அணித் தேர்வின் போது தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கிடைக்கலாம்.