
ஸ்ட்ரைக் அறிவிப்பு
வங்கதேச வீரர்கள் ஷகிப் அல் ஹசன் தலைமையில் கடந்த 21 அன்று முதல் ஸ்ட்ரைக் அறிவித்தனர். சம்பள உயர்வு மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் மாற்றம் ஆகியவற்றை முன் வைத்து தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை கிரிக்கெட் போட்டிகளில் ஆட மாட்டோம் என போராட்டத்தை அறிவித்தனர்.

எகிறிய அதிகாரிகள்
அதைக் கண்டு கோபமடைந்த வங்கதேச கிரிக்கெட் போர்டு அதிகாரிகள், இது பிளாக்மெயில், சதித் திட்டம் என விளாசினர். மேலும், இந்த சதிக்கு பின் இருப்பது யார் என கண்டுபிடிப்போம் எனவும் எகிறினர்.

பேச்சுவார்த்தை வெற்றி
ஒருபுறம் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் வங்கதேச கிரிக்கெட் போர்டு ஒரு கோரிக்கை தவிர மற்றவற்றை வாய் மொழியாக ஏற்றுக் கொண்டது. அதை அடுத்து வீரர்களும் தங்கள் போராட்டத்தை கை விட்டனர்.

குழப்பத்தில் வீரர்கள்
முதல் நாள் கோபத்தில் இருந்த கிரிக்கெட் போர்டு அதிகாரிகள், அனைத்து கோரிக்கைக்கும் ஒப்புக் கொண்டதால், உண்மையாகவே தங்கள் கோரிக்கைகள் நிறைவேறுமா? அல்லது வாய் மொழியாக கூறி இருப்பதை வைத்து காலம் தாழ்த்தி ஏமாற்றுவார்களா? என்ற குழப்பத்தில் உள்ளனர் வங்கதேச வீரர்கள்.

கேப்டன் போட்ட டீல்
கிரிக்கெட் போர்டு கோபத்தில் தான் இருக்கிறது என்பதை வெளிக் காட்டும் வகையில் அமைந்தது ஒரு சம்பவம். வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஸ்ட்ரைக் நடந்த போது கிராமீன்போன் என்ற தொலைதொடர்பு நிறுவனத்துடன் விளம்பர தூதராக இருக்க ஒப்பந்தம் போட்டுள்ளார்.

என்ன நடந்தது?
அக்டோபர் 21 போராட்டம் துவங்கி, அக்டோபர் 23 அன்று முடிவுக்கு வந்தது. இதற்கிடையே அக்டோபர் 22 அன்று பெரிய தொகைக்கு விளம்பர ஒப்பந்தம் செய்து இருக்கிறார் ஷகிப் அல் ஹசன். இதை எப்படியோ தெரிந்து கொண்ட கிரிக்கெட் போர்டு, "இதற்குத்தானே காத்துக் கொண்டு இருந்தோம்" என அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளது.

விதிப்படி தவறு
வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தப்படி கிரிக்கெட் வீரர்கள் தனிப்பட்ட முறையில் எந்த விளம்பர ஒப்பந்தமும் செய்து கொள்ளக் கூடாது. அது தேசிய அணியின் விளம்பரதாரர்களை பாதிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு அமலில் உள்ளது.

திட்டமிட்டு செய்தாரா?
இது எல்லோருக்குமே தெரியும் என்ற நிலையில் ஷகிப் ஹல் ஹசன், ஒருபுறம் ஸ்ட்ரைக் துவங்கி விட்டு, மறுபுறம் ஒப்பந்தம் போட்டு இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. விதிப்படி இந்த ஒப்பந்தத்தில் தங்களுக்கு நஷ்ட ஈடு வேண்டும் எனக் கோரி கிரிக்கெட் போர்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பழி வாங்குகிறார்
ஷகிப் அல் ஹசன் இதற்கு விளக்கம் அளிக்க கோரி உள்ளது போர்டு. ஷகிப் தன் மீது தவறு இல்லை என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு அளிக்கப்படும் என கூறும் அதிகாரிகள், அவர் வேண்டுமென்றே எங்களை பழி வாங்கும் நோக்கில் தான் இப்படி செய்துள்ளார். அதனால் அவர் மீது குற்றம் என தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என கூறி உள்ளனர்.

அடுத்து என்ன?
இந்தியா தொடருக்கான பயிற்சியில் வங்கதேச வீரர்கள் ஈடுபட்டு இருக்கும் நிலையில் இந்த சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அனேகமாக, ஷகிப் அல் ஹசனை கேப்டன் பதவியில் இருந்தும், அணியில் இருந்தும் நீக்க வாய்ப்பு ஏற்படலாம்.