
முதல் இன்னிங்ஸ்
2வது நாள் ஆட்டமான இன்று இந்திய அணியில் ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தாலும், மறுமுணையில் தூண் போன்று நின்று விளையாடிய ஓபனர் மயங்க் அகர்வால் 150 (311) ரன்களும், அக்ஸர் படேல் தனது பங்கிற்கு 52 ரன்கள் எடுத்தார். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் உள்ளது. நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் கைப்பற்றி உலக சாதனை படைத்தார்.

பிட்ச்-ல் திடீர் மாற்றம்
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆட களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியில் ரன்கள் சேர்வதற்குள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து திணறியது. குறிப்பாக ஓபனர் டாம் லதாம் 10 (14) மற்றும் கெயில் ஜேமிசன் 17 (36) மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் அடித்தனர். மற்றவர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்ட அந்த அணி முதல் இன்னிங்ஸில் 62 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 263 ரன்கள் பின்தங்கியது.

கோலி எடுத்த முடிவு
இதனால் இந்திய அணி பாலோ ஆன் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் விராட் கோலி, நாங்கள் பேட்டிங் செய்யவுள்ளோம் என அறிவித்தார். இதனால், ஒன்றரை நாள் தொடர்ந்து பந்துவீசிய நியூசிலாந்து அணி மீண்டும் தொடர்ந்து பந்துவீச வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 40 ஓவர்கள் மேல் போட்ட அஜாஸ் பட்டேல் மீண்டும் 10 ஓவர்களுக்கு மேல் வீசினார். எப்போதுதான் இன்றைய நாள் முடிவடையும் என்பது போல மிகவும் சோர்வாக காணப்பட்டனர்.

2வது நாள் முடிவு
2வது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்துள்ளது. சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டதால் ஓப்பனர்களக மயங்க் அகர்வால்38 (75), சேத்தேஸ்வர் புஜாரா 29 (51) ஆகியோர் களமிறங்கி சிறப்பாக விளையாடினர். இதனால் 2வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 69/0 ரன்கள் சேர்த்துள்ளது. நியூசிலாந்து அணியை விட 332 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.