கிளென் மேக்ஸ்வெல்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டம் ஆடுவதில் தனி சிறப்பு வாய்ந்த வீரர். அவர் கடந்த ஆண்டு தன் மனநலம் சரியான நிலையில் இல்லை எனக் கூறி கிரிக்கெட்டில் இருந்து சில மாதங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டார்.
மீண்டார்
பின் அதில் இருந்து மீண்டு ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றார். பின்னர் ஆஸ்திரேலிய அணியிலும் இடம் பெற்றார் மேக்ஸ்வெல். முழுமையாக மீண்ட அவர் தன் பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
தமிழ் காதலி
அவர் வினி ராமன் என்ற தமிழ் பெண்ணை கடந்த 2017 முதல் காதலித்து வருகிறார். மனநல பாதிப்பில் இருந்து மேக்ஸ்வெல் மீண்டதில் அவருக்கும் பெரிய பங்கு உள்ளது. அவர்கள் காதல் அடுத்த கட்டத்தை அடைந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
நிச்சயதார்த்தம்
இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் வீட்டிலேயே இந்திய முறைப்படி கிளென் மேக்ஸ்வெல் - வினி ராமன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின் தாங்கள் இந்திய முறைப்படி பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக இருவரும் அறிவித்துள்ளனர்.
ஐபிஎல் பயணம்
இதற்கிடையே கிளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் ஆடி வருகிறார். 2020 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடி வரும் அவர் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மறுபுறம் அவரை பிரிந்த சோகத்தில் இருந்தார் வினி ராமன்.
பிரிவு
அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் மற்றுமொரு வார இறுதியை லாக்டவுனில் செலவு செய்ததாகவும், ஐபிஎல் நடக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தன் ஏக்கத்தை பதிவு செய்து இருந்தார். இந்த நிலையில் தான், வினி ராமனிடம் பேசி வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் ஒரு ரசிகர்.
சீண்டிய ரசிகர்
வினி ராமனின் அந்த இன்ஸ்டாகிராம் பதிவின் கீழ் இந்திய ரசிகர் ஒருவர், "மனநலம் பாதிக்கப்பட்ட வெள்ளைக்காரரை விட்டுவிட்டு, இந்தியரை பிடித்து விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள்" என கூறி இருந்தார். அவரது வார்த்தைகள் மோசமாக இருந்தது.
செம பதிலடி
இது போன்ற பதிவுகளை பெரும்பாலும் பலரும் கண்டு கொள்ளாமல் போனாலும் லாக்டவுனில் பிரிவில் இருந்த வினி ராமன் அவரை விளாசி இருந்தார். நான் காதலிப்பதில் நிறம், நாடு, இனம் எல்லாம் பார்ப்பதில்லை. இணையத்தில் கண்ணனுக்கு தெரியாத யாரோ ஒரு ஆள் சொல்வதை கேட்டும் நான் வாழ்க்கை முடிவுகளை எடுப்பதில்லை என பதிலடி அளித்திருந்தார்.
மகிழ்ந்த மேக்ஸ்வெல்
தன் காதலி கொடுத்த நச் பதிலடியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் கிளென் மேக்ஸ்வெல். சில நபர்கள் எப்போதும் முட்டாள்தனமாக நடந்து கொள்கிறார்கள். வினி ராமன் அளித்த பதிலால் பெருமையாக உள்ளது என கூறி உள்ளார்.