மான்செஸ்டர்: டி 20 போட்டிகளில் அதி வேகமாக 2000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் இந்திய கேப்டன் விராத் கோஹ்லி.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நேற்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி 8 ரன்களை எடுத்தபோது, சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அதி விரைவாக 2000 ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
விராட் கோஹ்லி 60 போட்டிகளில் (56 இன்னிங்ஸ்) விளையாடி இந்த சாதனையை புரிந்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 49.07 ஆகும். இவர் 18 முறை அரை சதம் அடித்துள்ளார். இவருக்கு முன்னதாக மெக்கல்லம் 71 போட்டிகளில் 2000 ரன்களை கடந்ததே சாதனையாகும். கோஹ்லி அதனை முறியடித்தார்.
இந்திய அணி வீரர் டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடப்பது இதுவே முதல் முறையாகும். இவருக்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மா 1981 ரன்களுடன் இந்திய அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக 2000 ரன்களை கடந்த 4 ஆவது வீரர் விராட் கோஹ்லி ஆவர். இவருக்கு முன்னதாக 2000 ரன்களை கடந்த வீரர்கள்
மார்ட்டின் குப்தில் - 2271 ரன்கள்
ப்ரெண்டன் மெக்குல்லம் - 2140 ரன்கள்
சோயிப் மாலிக் - 2030 ரன்கள்
விராட் கோஹ்லி இதுவரை டி20 போட்டிகளில் சதம் அடித்தது இல்லை. இத்தொடரில் அதனை நிகழ்த்துவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.