For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலகக் கோப்பை: பிளட்சர் அபாரம்- இலங்கையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது மே.இ. தீவுகள்!

By Mathi

பெங்களூர்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது. அந்த அணியின் பிளட்சர் 64 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

டி20 உலகக் கோப்பையில் குரூப் 1- ல் இடம் பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியும் நடப்பு சாம்பியனான இலங்கை அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

westindies

இதனைத் தொடர்ந்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக தினேஷ் சந்திமாலும் தில்ஷானும் களமிறங்கினர். ஆனால் முதல் ஓவரில் இருந்தே மேற்கிந்திய தீவுகள் நேர்த்தியாக பந்து வீசியதுடன் விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து கைப்பற்றியது. சந்திமால் 18 பந்துகளில் 16 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

தில்ஷானும் 10 பந்துகளில் 12 ரன்களை எடுத்த நிலையில் அவுட் ஆனார். திரிமன்னே 5 ரன்களிலும் கபுகெதர 6 ரன்களிலும் அவுட் ஆகினர். இதனால் ரன்களை பெரிய அளவுக்கு குவிக்க முடியாமல் இலங்கை அணி தடுமாறியது.

இதேபோல் மிலிந்த ஸ்ரீவர்த்தன ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். 8.4வது ஓவரில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து வெறும் 47 ரன்களை மட்டுமே எடுத்து பரிதாபமாக தத்தளித்துக் கொண்டிருந்தது இலங்கை.

பின்னர் களத்தில் கை கோர்த்த ஆங்கிலோ மேத்யூஸ், திஷாரா பெரேரா இருவரும் நிலைத்து நின்று ரன்களை குவிக்க போராடினர். 17.1 வது ஓவரில் 31 பந்துகளில் 20 ரன்களை எடுத்த நிலையில் மேத்யூஸ் அவுட் ஆகிப் போனார். அப்போது இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 91 ரன்களை எடுத்து சற்றே ஆறுதல் நிலையில் இருந்தது.

தொடர்ந்து விளையாடிய திஷாரா பெரேரா கடைசி ஓவர்களில் விஸ்வரூபம் காட்டினார். 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் என்ற சற்றே கவுரவ நிலைக்கு நகர்ந்தது இலங்கை. கடைசி 20-வது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இலங்கை பறிகொடுத்தது. ரங்கனா ஹேரத் 3 ரன்களிலும் திஷாரா பெரேரா 28 பந்துகளில் 40 ரன்களளக் குவித்தும் அவுட் ஆகினர்.

20 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 122 ரன்களை எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி வெல்ல 123 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை.

மேற்கிந்திய தீவுகளின் சாமுவேல் பத்ரி 3 விக்கெட்டுகளையும் பிராவோ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் களமிறங்கியது மேற்கிந்திய தீவுகள் அணி. ஆனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வீரர் கெய்ல் தொடக்க வீரராக களமிறங்கவில்லை. இதில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய ஆந்த்ரே பிளட்சர் தொடக்கத்தில் படுஅதிரடியை வெளிப்படுத்தினார். 2 ஓவர்களில் ஆந்த்ரே பிளட்சர் 22 ரன்களை குவித்து அசத்தினார். ஆனால் அந்த வேகத்தை அடுத்தடுத்த ஓவர்களில் இலங்கை வீரர்களின் பந்துவீச்சு கட்டுப்படுத்தியது.

5.2 வது ஓவரில் ஜான்சன் சார்லஸ் விக்கெட்டை பறித்தனர் இலங்கை வீரர்கள். அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் 3 ரன்கள் எடுத்த நிலையில் சாமுவேல்ஸும் அவுட் ஆனார்.

இதனிடையே கேலரிகளில் இருந்து 'வி வாண்ட் கெய்ல்' என்ற முழக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கிறிஸ் கெய்ல் 47 பந்தில் சதம் அடித்து மிரட்டியிருந்தார். இதனால் பெங்களூரு ரசிகர்கள் அவரது ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்து உற்சாக குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர். 12.2- வது ஓவரில் 37 பந்துகளில் பிளட்சர் அரை சதத்தை எட்டினார்.

கடைசி சில ஓவர்களில் பிளட்சர் மீண்டும் அடுத்தடுத்து சிக்சர்கள், பவுண்டரிகளை விளாசித் தள்ளினார். 18.2 வது ஓவரில் ரஸ்ஸல் ஒரு சிக்சர் பறக்கவிட 3 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களை எடுத்தது மேற்கிந்திய தீவுகள். இதனால் இலங்கை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது மேற்கிந்திய தீவுகள்.

அந்த அணியின் பிளட்சர் 64 பந்துகளில் 84 ரன்களுடனும் ரஸ்ஸல் 8 பந்துகளில் 20 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இலங்கை அணியின் மிலிந்த ஸ்ரீவர்த்தன 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

Story first published: Sunday, March 20, 2016, 23:18 [IST]
Other articles published on Mar 20, 2016
English summary
West Indies beat Sri Lanka by 7 wickets in T20 Wolrd cup. Fletcher 84 not off 64 balls
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X