மும்பை: காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் விலகியுள்ளனர்.
இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. முன்னதாக அயர்லாந்துடன் 2 டி 20 போட்டிகளில் இந்தியா ஆடியது. இரண்டிலும் சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்தது.
அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆடும்போது பும்ராவின் கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை.
காயத்தின் தன்மை அதிகமாக இருப்பதால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் தொடரில் பும்ரா ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் டி20 போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். இவர் தற்போது இந்திய ஏ அணியின் சார்பாக இங்கிலாந்தில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடியது அவர் இந்திய சீனியர் அணியில் இடம் பெற காரணமாகும். மேலும் அவர் ஐபில் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கி சிறப்பாக பந்து வீசியது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் சுந்தர் காயம்
இங்கிலாந்து தொடரில் தேர்வு செய்யப்பட்ட மற்றுமொரு சுழல் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் களமிறங்க மாட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக டி20 போட்டிகளில் குருனாள் பாண்டியா மற்றும் ஒருநாள் போட்டிகளில் அக்சார் படேல் களமிறங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தற்போது இந்திய ஏ அணிக்காக இங்கிலாந்தில் விளையாடி வருகின்றனர்.