For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

மனிதக் கூட்டுழைப்பு என்ன செய்யும்.. எல்லாமும் செய்யும்.. ஒரு கால்பந்தாட்டக் கவிதை!

Recommended Video

மனிதக் கூட்டுழைப்பு என்ன செய்யும்..எல்லாமும் செய்யும்..வீடியோ

சென்னை: நமது வாசகர் ஜோசப் ராஜா கால்பந்தாட்டம் குறித்து வடித்துள்ள கவிதையை நமக்கு அனுப்பி வைத்துள்ளார். அது உங்களின் பார்வைக்கு:

A peom on Football

ஒரு கூட்டுழைப்பு
கோடிக்கணக்கான இதயங்களின் துடிப்பை
வேகமெடுக்கச் செய்கிறது
ஒரு கூட்டுழைப்பு
கோடிக்கணக்கான இமைகளின் துடிப்பை
நிறுத்தி வைத்து ஓடுகிறது
மனிதக் கூட்டுழைப்பு
என்ன செய்யும்
மனிதக் கூட்டுழைப்பு
எல்லாமும் செய்யும்
காற்றுக்கும் மழைக்கும் அழியாத
பிரம்மாண்டங்களை சிருஷ்டிக்கும்
வரலாற்றை உருவாக்கும்
புரட்சிகளைப் பிரசவிக்கும்
காலங்களை உந்தித் தள்ளும்
கால்பந்தை உதைக்கவும் செய்யும்

விளையாட்டில் அழகானதும்
அழகியலின் சொரூபமாகவும்
கால்பந்தாட்டம் ஜொலிக்கிறது
உலகத்தின் அதிகமான இதயங்கள்
கால்பந்தாட்டத்தைக் காதலிக்கின்றன
உலகத்தின் அதிகமான கால்கள்
கால்பந்தை துரத்துகின்றன
மைதானத்தின்
ஒருபக்கத்திலிருந்து
இன்னொரு பக்கத்திற்கு
கால்பந்து நெருங்கும்போது
பார்வையாளர்கள்
படபடத்துப் போகிறார்கள்
இருக்கையில் அமர்ந்திருந்தாலும்
நனைய நனைய
வியர்த்துப் போகிறது அவர்களுக்கு

மைதானத்திற்குள்
வீரர்கள் மட்டும் ஓடவில்லை
பார்வையாளர்களையும்
இழுத்துக் கொண்டே ஓடுகிறார்கள்
வீரர்கள் பந்தை
விரட்டுகின்ற வேகத்தில்
பச்சைப் புல்வெளிகளும்
பற்றியெரியத் தொடங்குகிறது
காற்றைக் கிழித்துக் கொண்டும்
பந்தைத் தள்ளிக் கொண்டும்
ஒவ்வொருவரிடமும் தப்பித்து
இலக்கே குறிக்கோளாய்
ஓடுகிறானே வீரனொருவன்
அவனைப் பாருங்கள்
தடைகளைத் தாண்டி
முன்னேறிச் செல்வதை
தடைகளை உடைத்து
இலக்கை அடைவதை
அவனிடம் கற்றுக்கொள்ளுங்கள்

ஒருவனும்
ஒருகணமும்
ஓய்ந்திருக்கலாகாது
ஓடவேண்டும்
ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்
கால்கள்
ஓடிக்கொண்டேயிருக்க
கண்கள்
பந்தின் மீதுமட்டும்
நிலைகுத்தியிருக்க
ஒவ்வொருவரும்
ஒவ்வொருவரும்
இயக்கத்திலேயே
இருந்து விடும்
இந்த விளையாட்டு
வெறும் விளையாட்டா
கால்பந்தாட்டம் தவமல்லவா
கால்பந்தாட்டம் கலையல்லவா

இயங்கு
இயங்கு
இயங்கிக் கொண்டேயிரு
இயக்கத்திலேயே இரு
இதுதான்
இவ்விளையாட்டின் விதி
இயக்கத்தில்
எல்லாமுமே அழகுதான்
உதைக்கும் வீரர்கள்
உதைபடும் பந்து
உணர்ச்சிக் கொந்தளிப்பில்
உட்கார்ந்திருக்கும் ரசிகர்கள் என
இயக்கத்தில்
எல்லாமுமே அழகுதான்
இயங்குதலில் இன்பமிருக்கிறது
இயங்குதலில் உயிர்ப்பிருக்கிறது
இயங்குதலில் உற்சாகமிருக்கிறது
இயங்குதலில் நித்தியமிருக்கிறது
இயங்குதலில் வாழ்க்கையிருக்கிறது
இயங்கக் கற்றுக்கொள்ளுங்கள்
வாழக் கற்றுக்கொள்ளுங்கள்
விளையாடக் கற்றுக்கொள்ளுங்கள்

உண்மையான கூட்டுழைப்பில்
கால்கள் எழுதும் கவிதை
கால்பந்தாட்டம்
உண்மையான கூட்டுழைப்பில்
கால்கள் மீட்டும் இசை
கால்பந்தாட்டம்
உண்மையான கூட்டுழைப்பில்
வீரர்கள் வரையும் ஓவியம்
கால்பந்தாட்டம்
பற்றியெரிய வேண்டுமென்றால்
பார்க்கத் தயாராகுங்கள்
படபடத்துப் பறக்க வேண்டுமென்றால்
பார்க்கத் தயாராகுங்கள்

திருவிழாக்கள்
மனிதர்களை உற்சாகப்படுத்துவதால்
எல்லோரோடும் சேர்ந்து
நாமும் உற்சாகமடைவோம்
திருவிழாக்கள்
மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்துவதால்
எல்லோரோடும் சேர்ந்து
நாமும் மகிழ்ச்சியடைவோம்
திருவிழாக்கள்
மனிதர்களை ஒன்றுசேர்ப்பதால்
எல்லோரோடும் விரைந்து
நாமும் ஒன்றுசேர்வோம்
நமக்காகத்தான் திருவிழாக்கள்
நமக்காகத்தான் விளையாட்டுக்கள்
நாம் விளையாடுவோம்
நாம் கொண்டாடுவோம்
இந்த
கால்பந்தாட்டத் திருவிழாவையும்
இந்த
வாழ்க்கையையும்

- ஜோசப் ராஜா

Story first published: Tuesday, June 19, 2018, 13:40 [IST]
Other articles published on Jun 19, 2018
English summary
Oneindia Tamil reader Joeshp Raja has written a poem on Football and sent to us.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X