லீக் போட்டி
இந்தியன் சூப்பர் லீக் தொடரின் ஏழாவது சீசன் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நான்காவது லீக் போட்டியில் ஒடிசா எஃப்சி - ஹைதராபாத் எஃப்சி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.
ஆதிக்கம்
போட்டியின் 6வது நிமிடத்திலும், 10வது நிமிடத்திலும் கோல் அடிக்கும் வாய்ப்பை பெற்ற அந்த அணி அதை நழுவ விட்டது. ஒடிசா அணி சாதாரண ஆட்டத்தை ஆடியது. அந்த அணியின் நகர்வுகளை ஹைதராபாத் அணி எளிதாக ஊகித்து ஆடியதால் ஆதிக்கத்தை தொடர்ந்தது.
பெனால்ட்டி வாய்ப்பு
35வது நிமிடத்தில் ஹைதராபாத் அணிக்கு பெனால்ட்டி வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி அரிடேன் சான்டானா கோல் அடித்தார். ஒடிசா அணி 40வது நிமிடத்தில் தான் முதல் முறையாக பந்தை ஹைதராபாத் கோல் கீப்பர் அருகிலேயே கொண்டு சென்றது. ஆனால், அதுவும் கோலாக மாறவில்லை.
வெற்றி
இரண்டாம் பாதியிலும் ஹைதராபாத் அணி பந்தை தன் வசமே அதிக நேரம் வைத்திருந்தது. சில கோல் வாய்ப்புகளை அந்த அணி வீணாக்கியது. எனினும், ஆட்ட நேர முடிவில் ஹைதராபாத் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அசர வைத்த ஹைதராபாத்
இதுவரை ஹைதராபாத் அணி எதிரணியை கோல் அடிக்க விடாமல் செய்தது இல்லை. அதை இந்த சீசனின் முதல் போட்டியிலேயே உடைத்து அசர வைத்தது. தன் இரண்டாவது ஐஎஸ்எல் சீசனை வெற்றியுடன் துவக்கி உள்ளது ஹைதராபாத் அணி.