
சானியா ஓய்வு அறிவிப்பு
ஐதராபாத்தை சேர்ந்த சானியா மிர்சா கடந்த 2003ம் ஆண்டு இந்திய டென்னிஸ் ஃபெடரேஷன் தொடர் மூலம் அறிமுகமாக விளையாடி வருகிறார். இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருந்து வரும் சானியா, இதுவரை 6 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். கடந்த சில நாட்களாக ஓய்வில் இருந்து அவர், ஆஸ்திரேலிய ஓபனில் கலந்துக் கொண்டுள்ளார். ஆனால் முதல் ஆட்டமே தோல்வியில் முடிந்துள்ளது.

முதல் சுற்றில் தோல்வி
மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா மற்றும் உக்ரைனை சேர்ந்த நாடியா கிச்சேனாக் ஆகியோர் இணைந்து ஆடினர். ஆனால் 6 - 4, 7 - 6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தனர். இந்த போட்டி முடிந்த பிறகு பேசிய சானியா மிர்சா, நடப்பு சீசனுடன் ஒட்டுமொத்த டென்னிஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

சானியா விளக்கம்
இதுகுறித்து விளக்கமளித்த அவர், நான் எடுத்தது கடினமான முடிவு தான். ஆனால் என் 3 வயது மகனை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. என் உடலும் முன்பை போல வேகமாக செயல்படவில்லை. சோர்வடைந்து விடுகின்றது. வயதாகிவிட்டதால் மூட்டுப்பகுதிகள் அதிக வலிகளை தருகிறது. எனவே இது ஓய்வு பெறுவதற்கான சரியான நேரம் என நினைக்கிறேன்.

தாய்மை காரணம்
எனக்கு இன்னும் இந்த சீசன் முழுவதும் விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால் ஆடப்போகிறேன். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் எனது உடல் எடையை குறைத்து, கடின பயிற்சிகளுடன் கம்பேக் கொடுத்தேன். தாய்மார்கள் தங்களது கனவுகளை விட்டுவிடக்கூடாது என்பதற்கு உதாரணமாக விளங்க நினைத்தேன். ஆனால் எனது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் வெளியேறுகிறேன் என தெரிவித்துள்ளார். சானியாவுக்கு இந்த தொடரில் இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் கலப்பு பிரிவில் போபண்ணாவுடன் இணைந்து விளையாடவுள்ளார்.