பாட்மின்டனிலும் அசத்தல்... இந்தியாவுக்கு 10வது தங்கம்
கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் பாட்மின்டனில் மலேசியாவுக்கு எதிரான பைனல்ஸில் 3-1 என்ற கணக்கில் வென்று, இந்திய அணி தங்கம் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 10 தங்கம் உள்பட மொத்தம் 19 பதக்கங்கள் இதுவரை கிடைத்துள்ளன.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகின்றது. வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில் இந்தியா உள்பட 71 நாடுகளைச் சேர்ந்த 6,700 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
முதல் நாளில், மகளிர் பளுதூக்குதலில் மீராபாய் சானு தங்கம், குருராஜா வெள்ளி வென்றனர். இரண்டாவது நாளில், பளு தூக்குதலில் சஞ்சிதா சானு புதிய சாதனையுடன் தங்கம், 18 வயதாகும் தீபக் லேதர் வெண்கலம் வென்றனர். மூன்றாவது நாளான நேற்று பளுதூக்குதலில் வேலூரைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கம், ரகலா வெங்கட் ராகுல் தங்கம் வென்று அசத்தினார். மூன்று நாட்களில் நான்கு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என, மொத்தம் 6 பதக்கங்கள் கிடைத்தன.

நான்காவது நாள்
நான்காவது நாளான நேற்று மகளிர் பளு தூக்குதலில் பூனம் யாதவ் தங்கம், துப்பாக்கி சுடுதலில் 11-ம் வகுப்பு மாணவி மனு பாக்கர் தங்கமும், ஹூனா சித்து வெள்ளியும், 10 மீட்டர் ஆடவர் ஏர் ரைபிள்ஸ் பிரிவில் ரவிக்குமார் வெண்கலமும் வென்றனர். பளுதூக்குதலில் விகாஸ் தாகுர் வெண்கலம் வென்றார். அதைத் தொடர்ந்து மகளிர் டேபிள் டென்னிஸ் அணி தங்கம் வென்றது.

இந்தியாவுக்கு குவியும் பதக்கம்
ஐந்தாவது நாளான இன்று, ஆடவருக்கான 105 கிலோ பளுதூக்குதல் பிரிவில் பிரதீப்சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் ஜித்து ராய் தங்கப் பதக்கத்தையும், ஓம் மிதர்வால் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். பின்னர் ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி தங்கம் வென்றது. இந்தியாவுக்கு 9 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என, 18 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

பாட்மின்டனிலும் தங்கம்
இந்த நிலையில் பாட்மின்டனில் இந்தியா தங்கம் வென்றது. பைனல்ஸில் மலேசியாவை 3-1 என்ற கணக்கில் வென்றது. லீக் ஆட்டங்களில் இலங்கையை 5-0, பாகிஸ்தானை 4-0, ஸ்காட்லாந்தை 5-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, காலிறுதியில் மொரீஷியசை 3-0 என்ற கணக்கில் வென்றது. அரை இறுதியில் சிங்கப்பூரை 3-1 என்ற கணக்கில் வென்றது.
இன்று நடந்த பைனல்ஸில் முதலில் நடந்த கலப்பு இரட்டையரில் சாத்விக் ராங்கிரெட்டி, அஸ்விணி பொன்னப்பா ஜோடி 21-14, 15-21, 21-15 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றுத் தந்தது. அடுத்த நடந்த ஆடவர் ஒற்றையரில் கிடாம்பி ஸ்ரீகாந்த், 21-17, 21-14 என்ற கணக்கில் சுலபமாக வென்றார்.

பதக்கம் வென்றார் சாய்னா
மூன்றாவதாக நடந்த ஆடவர் இரட்டையரில் சாத்விக் ராங்கி ரெட்டி, சிராக் சந்திரசேகர் ஷெட்டி ஜோடி கடினமாக போராடி 21-15, 22-20 என்ற செட்களில் தோல்வியடைந்தது. அதையடுத்து 2-1 என்று முன்னிலையை குறைத்தது மலேசியா. பின்னர் நடந்த மகளிர் ஒற்றையரில் சாய்னா நெஹ்வால் 21-11, 19-21, 21-9 என்ற செட்களில் வெற்றி பெற, 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதன் மூலம், இந்தியாவுக்கு 10வது தங்கம் கிடைத்தது.


Click it and Unblock the Notifications