டெல்லி: இந்தியா ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடரில் பறவையின் எச்சம் டிமதானத்தில் விழுந்ததால் போட்டி இரண்டு முறை நிறுத்தப்பட்ட விசித்திர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிங்கப்பூரின் லோ கீன் யாவ் மற்றும் இந்தியாவின் எச்.எஸ். பிரணாய் இடையே நடந்த பேட்மிண்டன் போட்டியிலேயே இந்த சம்பவம் நடந்தது. ஆடவர் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியின்போது, பறவையின் எச்சம் விழுந்தது போட்டி ஏற்பாடுகள் குறித்த தொடர்ந்து வரும் கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியின் மூன்றாவது நாளில் இந்த சம்பவம் நிகழ்ந்தன. விளையாடும் மைதான நிலைமைகள், காற்றுத் தரம், கடும் குளிர் மற்றும் மைதானத்தில் ஒரு குரங்கு காணப்பட்டது போன்ற பல புகார்களுக்கு மத்தியில் இந்த தொடர் நடைபெற்றது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு (BWF),"இந்தியா ஓபன் 2026 தொடரின் போது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தின் நிலைமைகளை மறுபரிசீலனை செய்ய வீரர்கள் மற்றும் அணிகளுடன் BWF ஈடுபட்டுள்ளது" என்று குறிப்பிட்டது.
"கிடைத்த தகவல் படி, இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் மற்றும் எதிர்கால சாம்பியன்ஷிப்களுக்கு சிறந்த சூழலை ஏற்படுத்த வேண்டும். வீரர்கள் பகிர்ந்த கருத்துகள் மற்றும் அதன்பின் வந்த ஊடக செய்திகளையும் நாங்கள் ஏற்று கொள்கிறோம். இருப்பினும், எங்கள் மதிப்பீடுகள், இந்திரா காந்தி விளையாட்டு வளாகம் கே.டி. ஜாதவ் ஸ்டேடியத்தை விட சிறந்த வசதிகளை கொண்டுள்ளது" .
"விலங்குகள் கட்டுப்பாடு உள்ளிட்ட சில நடவடிக்கை கவனம் தேவைப்பட்டது. இருப்பினும், இந்திய பேட்மிண்டன் சங்கம் (BAI) இந்த கவலைகளைத் தீர்க்க உடனடியாகச் செயல்பட்டது" என்று BWF தெரிவித்தது. எச்.எஸ். பிரணாய் மற்றும் லோ கீன் யாவ் இடையேயான போட்டி முதல் கேமில் பிரணாய் 16-14 என முன்னிலை பெற்றிருந்தபோது முதலில் நிறுத்தப்பட்டது. பின்னர், தீர்மானிக்கும் கேமில் பிரணாய் 1-0 என முன்னிலை பெற்றிருந்தபோது மீண்டும் நிறுத்தப்பட்டது. இரண்டு சந்தர்ப்பங்களிலும், முக்கிய தொலைக்காட்சி மைதானமான கோர்ட் 1 இல் இருந்து பறவையின் எச்சம் விழுந்ததால், அதிகாரிகள் வந்து சுத்தம் செய்தனர்.
21-18, 19-21, 14-21 என்ற தோல்விக்குப் பிறகு, பிரணாய், "பறவையின் எச்சம்தான் ஆட்டத்தை நிறுத்தியது" என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். 2021 உலக சாம்பியன் லோ கீன் யாவ் பேசும் போது, "அனைவரின் சக்தியும் இரண்டு நிலைகள் குறைந்துவிட்டது. வானிலை சரியில்லை. என் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. நான் குறைவாக சுவாசிக்கிறேன். முடிந்தவரை மாஸ்க் அணிகிறேன். முடிந்தவரை அறையிலேயே இருக்கிறேன்" என்று லோ கூறினார். ஆட்டம் நிறுத்தப்பட்டபோது, லோ வானத்தைப் பார்த்த பிறகு நெட்டை அணுகினார், தரையில் இருந்த எச்சத்தைப் பார்த்த சிங்கப்பூர் வீரர் அருவருப்புடன் காணப்பட்டர்.
முன்னாள் இந்திய பயிற்சியாளர் விமல் குமார், அரங்கில் இருந்து போட்டியைப் பார்த்தபோது, "பறவை எச்சமா என்று தெரியவில்லை. நிறுத்தம் 30-40 வினாடிகள்தான்; அவர்கள் தரையை துடைக்க அந்த நேரத்தை எடுத்துக் கொண்டனர். இது ஒரு பெரிய கவலைக்குரிய விஷயமாக எனக்குத் தெரியவில்லை. இதுவரை நான் எந்தப் பறவையையும் உள்ளே பார்க்கவில்லை. இது ஒரு சிறிய விஷயம்" என்றார்.
மேலும், "சீனாவில் உள்ள அரங்குகளைத் தவிர, தொண்ணூறு சதவீத போட்டி நடைபெறும் இடங்கள் பெருமளவில் புறக்கணிக்கப்படுகின்றன" என்று விமர்சித்தார். விளையாடும் மைதானத்தால் ஈர்க்கப்பட்டாலும், "நாம் இவ்வளவு பெரிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும்போது ஏன் நல்ல கழிப்பறை வசதிகள் இருக்கக்கூடாது? மைதான பராமரிப்பு மிக முக்கியம். இது பேட்மிண்டன் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அல்லது அமைப்பாளர்களின் வேலை மட்டுமல்ல" என்று கேள்வி எழுப்புனார். இந்த தொடரில், டென்மார்க்கின் மியா பிளிச்பெல்ட், மைதானத்தில் நிலவும் மோசமான சுகாதார நிலைமைகள் குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டார்.