வீட்டுப் பணியாளருக்கு இறுதிச்சடங்கு செய்த கவுதம் கம்பீர்... நெகிழவைத்த சம்பவம்
டெல்லி : தன்னுடைய வீட்டில் பணிபுரிந்துவந்த வீட்டுப் பணியாளர் உயிரிழந்ததையடுத்து அவரது இறுதிச்சடங்கை தானே முன்னிருந்து நடத்திய இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீர் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டுள்ளார்.
Recommended Video
இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பாஜக மக்களவை எம்.பி.யுமான கவுதம் கம்பீரின் வீட்டில் பணிபுரிந்த பணியாளர் சரஸ்வதி பாத்ரா என்பவர் சக்கரை நோய் மற்றும் பி.பி. காரணமாக இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.
ஒடிசாவை சொந்த மாநிலமாக கொண்ட, சரஸ்வதி பாத்ரா, கம்பீரின் வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.

பாஜக எம்.பி. கவுதம் கம்பீர்
உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் துவக்க வீரராக இருந்த முன்னாள் ஆட்டக்காரர் கவுதம் கம்பீர், தற்போது பாஜக மக்களவை எம்பியாக இருந்து வருகிறார். கடந்த 2004 முதல் 2016 வரையில் இந்திய அணியில் பங்கேற்று ஆடிய கம்பீர் 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இறுதிசடங்கு செய்த கம்பீர்
இந்நிலையில், கவுதம் கம்பீரின் வீட்டில் வேலை செய்து, அவருடைய குழந்தைகளை கவனித்துவந்த சரஸ்வதி பாத்ரா என்ற ஒடிசாவின் ஒரு பகுதியை சேர்ந்த பெண், கடந்த 21ம் தேதி உயிரிழந்துள்ளார். சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த 49 வயதான அவருக்கு கடந்த சில தினங்களாக சர் கங்கா ராம் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சடலத்தை கொண்டுசெல்ல முடியாத நிலை
டெல்லியில் சரஸ்வதி உயிரிழந்துள்ள நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு நிலவுவதால் அவரது சடலத்தை அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கவுதம் கம்பீரே சரஸ்வதியின் இறுதி சடங்கை முன்னின்று நடத்தி முடித்துள்ளார். அவரின் இந்த செயல் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

கவுதம் கம்பீர் உருக்கம்
தன்னுடைய வீட்டில் கடந்த 6 வருடங்களாக பணிபுரிந்துவந்த சரஸ்வதி, ஒரு பணியாளர் போல இல்லாமல், அக்கறையுடன் தன்னுடைய குழந்தைகளை கவனித்து வந்ததாகவும், தன்னுடைய குடும்பத்தில் ஒருவர் போல செயல்பட்டதாகவும் கம்பீர் தெரிவித்துள்ளார். அவரது இறுதிச்சடங்கை மேற்கொள்வது தனது கடமை என்றும் கூறியுள்ளார்.

தர்மேந்திர பிரதான் பாராட்டு
இந்நிலையில் கவுதம் கம்பீரின் இந்த செயல் தங்களுடைய சொந்தங்களை விட்டுவிட்டு தூரமாக சென்று வேலை பார்ப்பவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விஷயமாகும் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் ஸ்டீல் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேலும் ஏழை மக்களுக்கும் நம்பிக்கை அளிப்பதாக கம்பீரின் செயல் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications