ஜூவாலா கட்டா விளையாட நீதிமன்றம் அனுமதி!
டெல்லி: இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் விசாரணை முடியும் வரை ஜூவாலா கட்டா விளையாடலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்தியன் பேட்மிண்டன் லீக் போட்டி தொடரில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி நடந்த டெல்லி ஸ்மாஷர்ஸ்-பெங்களூர் பங்கா பீட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தின் போது சர்ச்சை வெடித்தது.
பெங்களூர் அணியில், காயமடைந்த ஹூ யுன்னுக்கு பதிலாக டென்மார்க்கை சேர்ந்த ஜான் ஜோர்கென்சனை மாற்று வீரராக சேர்க்க கடைசி நிமிடத்தில் போட்டி அமைப்பாளர்கள் ஒப்புதல் அளித்ததற்கு டெல்லி அணியின் வீரர், வீராங்கனைகள் ஆட்சேபம் தெரிவித்ததுடன், இந்த ஆட்டத்தில் ஆடமாட்டோம் என்று மிரட்டலும் விடுத்தனர். இந்த சர்ச்சையினால், போட்டி அமைப்பாளர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டனர். என்றாலும் ஆட்டம் தொடங்க 40 நிமிடங்கள் தாமதம் ஆனது.

ஜூவாலா பின்னணி
சர்ச்சைக்கு மத்தியில் நடந்த இந்த ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில் டெல்லி அணி வெற்றி பெற்றது. டெல்லி அணி திடீரென போர்க்கொடி தூக்கியதன் பின்னணியில் அந்த அணியின் கேப்டன் ஜூவாலா கட்டா இருந்ததாகவும், அவர்தான் சக வீரர், வீராங்கனைகளை தூண்டிவிட்டதாகவும் புகார் எழுந்தது. இதுவே இப்போது அவரது பேட்மிண்டன் வாழ்க்கையை சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது.

ஆயுட்கால தடை?
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய ஒழுங்கு நடவடிக்கை குழு ஜூவாலா கட்டாவுக்கு ஆயுட்கால தடை விதிக்க சிபாரிசு செய்துள்ளது. இந்த பரிந்துரை குறித்து முடிவு செய்ய இந்திய ஒலிம்பிக் சங்க இணைச் செயலாளர் ஆனந்தேஷ்வர் பாண்டே தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டியை இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் கடந்த 7ஆம் தேதி அமைத்தது.

விளையாட முடியாது
இந்த கமிட்டி தீர்ப்பு அளிக்கும் வரை அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான அணித்தேர்வில் பரிசீலனை செய்யப்படமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் டென்மார்க், பிரெஞ்ச் ஓபன் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது.

சாதனை நாயகி
30 வயதான ஜூவாலா கட்டா, 2010ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் அஸ்வினியுடன் இணைந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர். மேலும் 2011ஆம் ஆண்டு அஸ்வினியுடன் இணைந்து உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்று புதிய வரலாறு படைத்தவர்.

மன்னிப்பு கேட்க மறுப்பு
தான் எந்த தவறும் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருக்கும் அவர், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற இந்திய பேட்மிண்டன் சம்மேளனத்தின் வேண்டுகோளையும் நிராகரித்து விட்டார்.
"ஜூவாலா ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? அவர் எந்த தவறும் செய்யவில்லையே" என்று அவரது தந்தை கிரந்தி கட்டா கூறினார். இந்த நிலையில் ஜூவாலா கட்டா இந்த விஷயத்தை இப்போது நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தனக்கு ஆயுட்கால தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், அந்த பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அடுத்த ஒரு மாதத்திற்கு என்னை சர்வதேச போட்டிக்கான அணித்தேர்வில் கருத்தில் கொள்வதில்லை என்ற இந்திய பேட்மிண்டன் சம்மேளனத்தின் உத்தரவையும் நீக்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் விசாரணை முடிவும் வரை ஜூவாலா கட்டா விளையாட அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


Click it and Unblock the Notifications