ஜகார்தா: இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால், தனது பட்ட வேட்டையை தொடர்கிறார். ஜகார்தாவில் நடந்த இந்தோனேசிய சூப்பர் சீரிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை சயாகா சடோவை வீழ்த்தி பட்டம் வென்றார்.
கடந்த ஒரு மாதத்தில் சாய்னா வெல்லும் 3வது சாம்பியன் பட்டம் இதுஎன்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 3 வாரங்களாக அவர் எந்தப் போட்டியிலும் தோற்காமல் சாதனையும் படைத்துள்ளார்.
சயாகாவை 21-19, 13-21, 21-11 என்ற செட் கணக்கில் சாய்னா வீழ்த்தினார். இந்தப் போட்டி 45 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
சமீபத்தில்தான் இந்திய ஓபன் கிராண்ட்ப்ரீ மற்றும் சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பட்டங்களை சாய்னா வென்றிருந்தார். இந்த நிலையில் ஹாட்ரிக் வெற்றியாக இந்தோனேசிய பட்டம் அவருக்கு கைவசமாகியுள்ளது.
மேலும், இந்த வெற்றியையும் சேர்த்து சாய்னா இதுவரை 3 சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்றுள்ளார்.