காமன்வெல்த் பாட்மின்டன் அரை இறுதியில் இந்தியா!
கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் போட்டிகள் பாட்மின்டன் லீக் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகளை வென்று காலிறுதிக்கு நுழைந்த இந்தியா, மொரீஷியஸ் அணியை 3-0 என்ற கணக்கில் வென்றது. அரை இறுதியில் சிங்கப்பூர் அணியை சந்திக்க உள்ளது.
காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடக்கின்றன. பளு தூக்குதலில், மீராபாய் சானு தங்கம், குருராஜா வெள்ளி, சஞ்சிதா சானு தங்கம், தீபக் லேதர் வெண்கலம், சதீஷ் சிவலிங்கம் தங்கம் என்று இதுவரை ஐந்து பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் பாட்மின்டனில் லீக் ஆட்டங்களில் இலங்கையை 5-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானை 4-0 என்றும், ஸ்காட்லாந்து அணியை 5-0 என ஒயிட்வாஷ் செய்தது.
இன்று நடந்த காலிறுதியில் மொரீஷியஸ் அணியை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. ஆடவர் இரட்டையரில் சாத்விக் ராங்கி ரெட்டி, சிராக் சந்திரசேகர் ஷெட்டி ஜோடி 21-12, 21-3 என்ற கணக்கில் வென்றது.
மகளிர் இரட்டையரில் சிக்கி ரெட்டி, அஸ்வினி போபன்னா ஜோடி 21-8, 21-7 என்ற கணக்கில் வென்றது. பின்னர் நடந்த ஆடவர் ஒற்றையரில் கிடாம்பி ஸ்ரீகாந்த 21-12, 21-14 என்று வென்று அசத்தினார். நாளை நடக்கும் அரை இறுதியில் சிங்கப்பூர் அணியை இந்தியா சந்திக்கிறது.


Click it and Unblock the Notifications