டெல்லி: முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால், காயம் காரணமாக, காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

நடப்பு சாம்பியன் சாய்னா நெஹ்வால் உலகின் முன்னணி பேட்மிண்டன் வீரர்களில் ஒருவராகும். வரும் 23ம்தேதி காமன்வெல்த் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், போட்டித்தொடரில் இருந்து விலகுவதாக சாய்னா இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது கஷ்டமான ஒரு முடிவு என்றாலும் அதை தவிர்க்க வேறு வழியில்லை என்றார். ஆஸ்திரேலியாவில் நடந்த பேட்மிண்டன் தொடரின்போது இடுப்பில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகாததால் காமன்வெல்த் போட்டித்தொடரில் இருந்து விலக முடிவு செய்ய வேண்டியதாயிற்று என்றார்.
ஒலிம்பிக்கில் வெங்கல பதக்கம் வென்ற சாய்னாவுக்கு காலிலும் காயம் இருப்பதாக தெரிகிறது. காமன்வெல்த் விளையாட்டு தொடரில் இருந்து ஓய்வு பெற்றால்தான், அவரால் அதைத்தொடர்ந்து நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.