ரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இன்று இந்தியாவின் பி.வி.சிந்துவுடன் மோதப் போகும் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின், உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஆவார்.
நேற்று நடந்த முதல் அரை இறுதிப் போட்டியில் அவர் சீனாவின் லி யுருயியை 21-14, 21-16 என்ற நேர் செட்களில் அதிரடியாக வீழ்த்தினார். சீன வீராங்கனையை ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக அடக்கி வைத்தார் மரின். ஆனால் தோல்வியுற்ற லிதான் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

23 வயதாகும் மரின் 2 முறை உலகச் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றவர். முதல் முறையாக ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
பி.வி.சிந்துவைச் சந்திக்கத் தான் தயாராக இருப்பதாகவும், நல்லதொரு ஆட்டத்தைத் தான் தரப் போவதாகவும், போட்டியின் முடிவில் ஒருவர் மட்டுமே வெல்ல முடியும் என்றும் மரின் கூறியுள்ளார்.
பார்க்கலாம் சிந்துவிடம் சிக்கித் திணறுவாரா மரின் என்பதை.