தீரா வலி.. என் விளையாட்டு வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே நினைக்கிறேன்: சாய்னா ஷாக் பேட்டி
டெல்லி: முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தமது பேட்மிண்டன் வாழ்க்கை முடிவுக்கு வர இருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால். ஆனால், முழங்கால் காயம் காரணமாக லீக் சுற்றுடன் அவர் வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முழங்கால் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சிறிது ஓய்வில் இருந்த அவர், சீன சூப்பர் சீரிஸ் போட்டியில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் மீண்டும் பெங்களூருவில் பயிற்சியைத் தொடங்கினார்.
ஆனால், காயம் காரணமாக மீண்டும் அவரால் பழைய படி விளையாட முடியவில்லை. தொடர்ந்து வலியால் அவர் அவதிப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் பேட்டியளித்துள்ளார். அப்பேட்டியில் அவர், "காயங்களில் இருந்து மீண்டு வர முடியும் எனத் தோன்றவில்லை. பலர் என் விளையாட்டு வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும் நான் திரும்ப வரமாட்டேன் என்றும் நினைக்கிறார்கள்.
என் அடி மனதில், நானும் என் விளையாட்டு வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே நினைக்கிறேன். எப்படி என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். சரியாக கணிக்க முடியாத விஷயம் இது' என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சாய்னாவின் இந்தப் பேட்டியால், வருகிற 15ஆம் தேதி சீனா சூப்பர் சீரியஸ் பேட்மிண்டன் தொடரில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாக உள்ளது.


Click it and Unblock the Notifications