உலக பேட்மிண்டன் தொடரில் இருந்து பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி.. 88 நிமிட போராட்டம் வீண்
டெல்லி: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போராடி தோல்வியடைந்தார். சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், சீனாவின் 3வது நிலை வீராங்கனையான வாங் ஜி யியிடம் 11-21, 21-15, 17-21 என்ற செட் கணக்கில் சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார். 88 நிமிடம் நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது போல முன்னிலையில் இருந்த சிந்து கடைசி நேரத்தில் தவறுகள் செய்து தோல்வி அடைந்தார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் தனது 6வது பதக்கத்தை வெல்லும் சிந்துவின் கனவு பறிபோனது.
முதல் செட்டை இழந்த போதிலும், 2வது செட்டை 21-15 என வென்று சிந்து அபாரமாக மீண்டு வந்தார். வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டிலும் சிந்து 8-4 மற்றும் 13-10 என்ற கணக்கில் வலுவான முன்னிலையில் இருந்தார். ஆனால் அந்த நெருக்கடியான தருணத்தில், புள்ளிகளை அவசரமாகப் பெற வேண்டும் என்ற நோக்கில் சிந்து தொடர்ச்சியாக சில தவறுகளை செய்தார். நிதானமாக ஆடாமல், விரைவாக ஆட்டத்தை முடிக்க முற்பட்டதால் பல ஷாட்கள் வெளியே சென்று எதிரணிக்கு சாதகமாக அமைந்தது.

ஆட்டம் 16-15 என்ற உச்சக்கட்ட பரபரப்பில் இருந்தபோது, சீன வீராங்கனை வாங் ஜி யிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு ஆடுகளத்தில் சரிந்தார். அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்ததால் ஆட்டம் சிறிது நேரம் நின்றது. பின்னர் 54 ஷாட்கள் கொண்ட மெகா ரேலிக்கு பிறகும் மீண்டும் தசைப்பிடிப்புக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்த தொடர் இடைவேளைகள் ஆட்டத்தின் வேகத்தை குறைத்து, சிந்துவின் கவனத்தை சிதறடித்தது. இதனை பயன்படுத்திய சீன வீராங்கனை வெற்றியை தட்டிச் சென்றார்.
சீன வீராங்கனையின் காயம் உண்மையானதா என பிவி சிந்து சந்தேகம் கிளப்பினார். "அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என தெரியவில்லை. ஒருவேளை இது அவரது ஆட்ட வியூகமாக இருக்கலாம். ஆனால், நான் இன்னும் கவனமுடன் ஆடி இருக்க வேண்டும்" என்றார் பிவி சிந்து.
இது குறித்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் விமல் குமார், சிந்து காட்டிய அவசரமும் கவனச்சிதறலுமே தோல்விக்கு காரணம் என்று கூறினார். களத்தில் காயம் ஏற்படும் போது நடுவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு கூடுதல் நேரம் அனுமதிக்க சர்வதேச விதிமுறைகளில் இடமுள்ளது. சீன வீராங்கனையின் தசைப்பிடிப்பு உண்மையானதாக இருந்தாலும், சிந்து இன்னும் சற்று பொறுமையுடன் கையாண்டிருந்தால் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications
