காலையில் வெண்கலம்.. மாலையில் 2வது பதக்கத்திற்கு உத்தரவாதம்... அசத்தியது இந்தியா!
சென்னை: காலையில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.. இன்று இரவு அடுத்த பதக்கத்தை அதுவும் தங்கம் அல்லது வெள்ளியை உறுதி செய்து விட்டது இந்தியா.
அட்டகாசமாக ஆடி இந்தியாவை மகிழ்ச்சியால் அதிர வைத்து விட்டார் பி.வி.சிந்து. இவரது வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு 2வது ஒலிம்பிக் பதக்கம் கிடைப்பது உறுதியாகி விட்டது. இறுதிப் போட்டியில் சிந்து வென்றால் அது அவருக்கு தங்கப் பதக்கத்தைக் கொடுக்கும். இது பேட்மிண்டனில் இந்தியாவுக்கான முதல் தங்கமாகவும் அமையும். வரலாறு படைப்பார் சிந்து.

அதேசமயம், இறுதிப் போட்டியில் தோற்றால் அவருக்கு வெள்ளி கிடைக்கும். அதுவும் நமக்கு வரலாறுதான். காரணம், பேட்மிண்டனில் இந்தியா இதுவரை வெள்ளிப் பதக்கம் வென்றதில்லை. அதிகபட்சம் வெண்கலம் மட்டுமே கிடைத்துள்ளது. அதைப் பெற்றுக் கொடுத்தவர் சாய்னா.
இன்று காலைதான் இந்தியாவுக்கு மகளிர் மல்யுத்தப் போட்டியில் சாக்ஷி மாலிக் மூலம் வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது. பி.வி.சிந்து மூலமாக இந்தியாவுக்கு 2வது பதக்கம் தயாராகி விட்டது.

இன்றைய ஆட்டத்தில் சிந்து புயலென ஆடினார். அவரை எதிர்த்து மோதிய ஜப்பான் வீராங்கனையும் சளைக்காமல் பதிலடி கொடுத்தார். ஆனாலும் விடாமல் வேங்கையாக மாறி ஜப்பான் வீராங்கனை நொறுக்கித் தள்ளி விட்டார் சிந்து.
அவரது அதிரடி ஆட்டம் காரணமாக இந்தியாவே குதூகலத்தில் கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இன்று இரட்டைத் தீபாவளியாக மாறி விட்டது.


Click it and Unblock the Notifications