Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

துபாயில் சிக்கித் தவித்த சிந்து.. போர் பதற்றத்தால் விமான நிலையத்தில் பெரும் குழப்பம்.. என்ன நடந்தது?

துபாய்: ஈரான் மற்றும் இஸ்ரேல் - அமெரிக்கா நாடுகளுக்கு இடையே திடீரென மூண்டுள்ள போர் பதற்றம் காரணமாக, சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பி.வி. சிந்து துபாய் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டார். வானில் ஏவுகணைகள் பறக்கும் சத்தம் கேட்பதாகவும், அங்கு நடக்கும் பகீர் சம்பவங்கள் குறித்தும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விரிவாகப் பதிவிட்டுள்ளார்.

நடந்தது என்ன? சிந்து பதிவு

தற்போது துபாயில் சிக்கியுள்ள தான் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துள்ள பி.வி. சிந்து, எக்ஸ் வலைத்தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"தற்போது நடக்கும் விஷயங்களை என்னால் நம்பவே முடியவில்லை. வானில் தாக்குதல்களை இடைமறித்து அழிக்கும் சத்தங்கள் தொடர்ந்து கேட்கின்றன. நிலைமை இவ்வளவு விரைவாக மோசமடைவதைப் பார்ப்பது உண்மையிலேயே மிகவும் அச்சமாக இருக்கிறது. மனதை உலுக்கும் பல வீடியோக்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. இதுதான் இங்கு நடக்கும் கசப்பான உண்மை.

துபாய் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு நகரம். எப்போதுமே பாதுகாப்பானதாகவும், துடிப்பான நகரமாகவும் இருந்த துபாயில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருப்பதைப் புரிந்துகொள்வதே கடினமாக உள்ளது. எனது நிலைமை குறித்துத் தொடர்ந்து மெசேஜ் செய்து விசாரித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். அது எனக்கு மிகப் பெரிய ஆறுதலாக உள்ளது.

PV Sindhu Stranded at Dubai Airport Olympic Star Shares Terrifying Experience Amid Gulf Air space Tension

விமான நிலையத்தில் குழப்பம்

நான் தற்போது பாதுகாப்பாக இருக்கிறேன். ஈரானுடனான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நானும் எனது குழுவினரும் துபாயில் சிக்கிக் கொண்டுள்ளோம். நாங்கள் நலமாகவே இருக்கிறோம். விமான நிலையம் முழுவதும் ஒரே குழப்பமாக உள்ளது. ஏராளமான குடும்பங்கள் தங்கள் பயணத்தைத் தொடர முடியாமல் பல மணி நேரமாகக் காத்திருக்கின்றனர். இந்த மோசமான சூழ்நிலை விரைவில் கடந்து போகும் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம்.

இதுபோன்ற தருணங்கள்தான் நமது சாதாரண வாழ்க்கை எவ்வளவு எளிதில் சிதைந்துபோகக் கூடியது என்பதை நமக்கு உணர்த்துகின்றன. இந்தப் போர் பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என்றும் நான் பிரார்த்தனை செய்கிறேன்" என்று பி.வி. சிந்து தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

விமானங்கள் ரத்து.. தவிக்கும் பயணிகள்

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து ஈரானின் ராணுவ மற்றும் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, மேற்கு ஆசியப் பகுதியில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக ஈரான், ஈராக் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான முக்கிய வழித்தடங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால், துபாய் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்தியாவைச் சேர்ந்த ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களின் வழித்தடங்களை மாற்றியமைத்துள்ளன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நிலைமை சீரான பிறகு பாதுகாப்பான வழித்தடங்களில் மீண்டும் விமானச் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போர் பதற்றம் காரணமாக நள்ளிரவில் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகளுடன் பி.வி. சிந்துவும் சிக்கித் தவித்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. அவர் பாதுகாப்பாக இருப்பதாக அறிவித்துள்ள செய்தி அனைவருக்கும் சற்று நிம்மதியை அளித்துள்ளது.

Story first published: Sunday, March 1, 2026, 7:29 [IST]
Other articles published on Mar 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+