பாரீஸ்: 2025 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதி சுற்றுக்கு பிவி சிந்து தகுதிபெற்றுள்ளார். பாரிஸில் நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 ஆட்டத்தில் தரவரிசையில் முனனணியில் இருந்தவர்கள் அதிர்ச்சி தோல்வியை தழுவினர். சிந்து, உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவின் வாங் ஜியி-யை எதிர்கொண்டு கால் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார்.
2019 உலக சாம்பியனான சிந்து, முதல் செட்டில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தினார். பின்னர் இரண்டாவது செட்டில் மிகச் சிறப்பாக விளையாடி 21-19, 21-15 என்ற கணக்கில் வெறும் 48 நிமிடங்களில் வெற்றியைப் பதிவு செய்தார். இதனையடுத்து சிந்து, வரும் வெள்ளிக்கிழமை அரையிறுதி ஆட்டத்தில் இந்தோனேசியாவின் புத்ரி குசுமா வார்டானியை எதிர்கொள்வார்.

இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள பிவி சிந்து, "எனக்கு இது மற்ற எந்த வீரரைப் போலவே இருந்தது. ஏனெனில் கோர்ட்டுக்குள் நுழையும்போது இது எளிதாக இருக்காது என்பது தெரியும். உலக சாம்பியன்ஷிப்பில் முதல் சுற்று முதல் எளிதாக இருக்காது, ஒவ்வொரு புள்ளிக்கும், ஒவ்வொரு ராலிக்கும் போராட வேண்டும். நிச்சயமாக அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர், அவருக்கு சிறப்பான வரலாறு உள்ளது. ஆனால், அதை மனதில் வைத்து நான் சிந்திக்கவில்லை. எனக்கு இது ஒரு முற்றிலும் புதிய ஆட்டமாக இருந்தது." என்று கூறினார்.
முன்னதாக, துருவ் கபிலா மற்றும் தனிஷா க்ராஸ்டோ ஆகியோர் ஹாங்காங் சீனாவின் ஐந்தாவது தரவரிசை பெற்ற டாங் சுன் மேன் மற்றும் சே யிங் சுவெட் ஆகியோரை 19-21, 21-12, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். இந்தப் போட்டி 1 மணி நேரம் 3 நிமிடங்கள் நீடித்தது. இதன் மூலம் இந்த ஜோடி, கால் இறுதிக்கு முன்னேறினர்.
சாத்விக்ஸாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஆகியோர் இன்றிரவு களமிறங்கவுள்ளனர். சாத்விக்-சிராக் தங்களது முதல் ஆட்டத்தில் லியு குவாங் ஹெங் மற்றும் யாங் போ ஹான் ஆகியோரை 22-20, 21-13 என்ற கணக்கில் வெற்றி பெற்று சிறப்பான தொடக்கத்தைப் பெற்றனர். ஒன்பதாவது தரவரிசை பெற்ற இந்திய ஜோடி, 16-வது சுற்றில் ஆறாவது தரவரிசை பெற்ற சீனாவின் லியாங் வெய் காங் மற்றும் வாங் சாங் ஆகியோரை எதிர்கொள்ளவுள்ளனர்.