Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்மிண்டன்: இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் ஓய்வு அறிவிப்பு

ஐதராபாத்: இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால், போட்டி விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவதாக உறுதிப்படுத்தியுள்ளார். நீண்ட காலமாக அவர் எதிர்கொண்டு வந்த மூட்டுப் பிரச்சனையால், விளையாட்டுக்குத் தேவையான உடல் திறனைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை என்பதே காரணம் என தெரிவித்தார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா, கடைசியாக 2023 சிங்கப்பூர் ஓபனில் பங்கேற்றார்.

தனது ஓய்வு குறித்த அணுகுமுறையை விளக்கிய சாய்னா, “நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விளையாடுவதை நிறுத்திவிட்டேன். என் விருப்பப்படி விளையாட்டில் நுழைந்து, என் விருப்பப்படியே வெளியேறினேன். அதனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உணர்ந்தேன்” எனக் கூறினார். மேலும், “உங்களால் விளையாட முடியவில்லையென்றால், அவ்வளவுதான். அது சரியே” என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான சாய்னா, தனது ஓய்வு முடிவுக்குக் காரணம் மூட்டில் ஏற்பட்ட தீவிர பிரச்சினை தான் என்றும், இதனால் தொடர்ச்சியான பயிற்சி மேற்கொள்வது முடியாத காரியமாகிவிட்டதாகவும் தெரிவித்தார். தனது மருத்துவ நிலைமையை விவரித்த அவர், "என் குருத்தெலும்பு முற்றிலும் சிதைந்துவிட்டது, எனக்கு மூட்டுவலி உள்ளது. இதை என் பெற்றோரும், பயிற்சியாளர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் அவர்களிடம் 'இனி என்னால் விளையாட முடியாது, இது கடினம்' என்று கூறினேன்" என்றார்.

"மெல்ல மெல்ல சாய்னா விளையாடுவதில்லை என்பதை மக்களும் உணர்வார்கள்" என்று சாய்னா மேலும் தெரிவித்தார். "என் ஓய்வை பெரிய விஷயமாக நான் நினைக்கவில்லை. என் நேரம் முடிந்துவிட்டது என்றுதான் நான் உணர்ந்தேன், காரணம் என்னால் முன்பு போல் அதிக முயற்சி செய்ய முடியவில்லை, என் மூட்டு ஒத்துழைக்கவில்லை."

"உலக அளவில் சிறந்து விளங்க எட்டு முதல் ஒன்பது மணி நேரம் பயிற்சி செய்வோம். ஆனால், இப்போது என் மூட்டு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திலேயே செயலற்றுப் போனது. அது வீங்கிவிட்டது, அதற்குப் பிறகு பயிற்சி மேற்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. அதனால் போதும் என்று நினைத்தேன். என்னால் இதற்கு மேல் முயற்சி செய்ய முடியாது" என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

சாய்னாவின் வாழ்க்கை 2016 ரியோ ஒலிம்பிக்கில் ஏற்பட்ட மூட்டு காயத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இருப்பினும், 2017 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், 2018 காமன்வெல்த்தில் தங்கம் வென்று வலுவான கம்பேக் கொடுத்தார். இருந்தும், தொடர்ச்சியான பிரச்சனைகள் நீடித்தன. 2024-ல் அவருக்கு மூட்டுகளில் மூட்டுவலி மற்றும் குருத்தெலும்பு தேய்மானம் இருப்பது உறுதியானது.

Story first published: Tuesday, January 20, 2026, 9:31 [IST]
Other articles published on Jan 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+