ஆசிய சாம்பியன்ஷிப் பாட்மின்டனில் சாய்னா நெஹ்வால், பிரனாய் வெண்கலம் வென்றனர்
வூஹான்: சீனாவில் நடக்கும் ஆசிய சாம்பியன்ஷிப் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால், எச்எஸ் பிரனாய் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டியில் பாட்மின்டன் பிரிவில் இந்தியா அசத்தியது. அணி மற்றும் தனிநபர் பிரிவுகளில் 2 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என, 6 பதக்கங்கள் கிடைத்தது. அதற்கடுத்து சீனாவின் வூஹானில் நடக்கும் ஆசிய சாம்பியன்ஷிப் பாட்மின்டன் போட்டியில் இந்திய வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நெஹ்வால் வெண்கலப் பதக்கம் வென்றார். அரை இறுதியில் அவர் சீன தைபேயின் டாய் ட்சூ யிங்குடன் மோதினார். இதில் 27-25, 21-19 என்ற கணக்கில் யிங் வென்றார்.
இதுவரை இருவரும் சந்தித்துள்ள 16 போட்டிகளில் யிங் 11ல் வென்றுள்ளார். 2013ல் நடந்த சுவிஸ் ஓபன் போட்டியில் இருந்து தொடர்ந்து 9வது முறையாக சாய்னாவை அவர் வென்றுள்ளார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சாய்னா நெஹ்வால் மூன்றாவது முறையாக வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் எச்எஸ் பிரனாய், ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் லாங்குடன் மோதினார். இதில் 21-16, 21-18 என்ற கணக்கில் லாங் வென்றார். அதையடுத்து பிரனாய் முதல் முறையாக ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார்.
முன்னதாக ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து கால் இறுதியில் தோல்வியடைந்தனர்.


Click it and Unblock the Notifications