சிந்து, சாய்னாவுக்கு பதக்க வாய்ப்பு.. இறுதியில் நேருக்கு நேர் மோதலாம்!
உலக பேட்மின்டன் சாம்பியன் போட்டியில் பதக்க வாய்ப்பை இந்தியாவின் பி.வி. சிந்து, சாய்னா நெய்வால் உறுதி செய்துள்ளனர். அரை இறுதிக்கு இருவரும் நுழைந்துள்ளனர். இறுதிப் போட்டியில், இருவரும் மோதுவதற்கு வாய்ப்பு உள்ளது.
2011 முதல் உலகின் மிக உயரிய போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்து வருகிறது. 2011ல் உலக சாம்பியன் போட்டியில், ஜூவாலா கட்டா - அஸ்வினி போபண்ணா, மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றனர். 2012ல் சாய்னா நெய்வால், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். 2013, 2014ல், உலக சாம்பியன் போட்டியில் பி.வி. சிந்து வெண்கலம் வென்றார். 2015ல் உலக சாம்பியன் போட்டியில் சாய்னா நெய்வால் வெள்ளி வென்றார். 2016ல் பி.வி. சிந்து, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றார்.

உலக பேட்மின்டன் சாம்பியன் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. நேற்று இரவு நடந்த கால் இறுதி ஆட்டங்களில் வென்று, பி.வி. சிந்து, சாய்னா நெய்வால் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
இறுதி போட்டிக்கு நுழையும் வாய்ப்பு இருவருக்கும் உள்ளதால், முதல் முறையாக, உலக சாம்பியன் போட்டியில் இறுதியில் இரு இந்தியர்கள் மோதும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கு முன் சீனா மற்றும் இந்தோனேசியா மட்டுமே இந்த சாதனையை புரிந்துள்ளது. மகளிjd ஒற்றையர் பிரிவின் பைனலில் 12 முறை, சீன வீராங்கனைகள் மோதியுள்ளனர். இந்தோனேசியாவுக்கு 1980ல் இந்த வாய்ப்பு கிடைத்தது.
நேற்று இரவு நடந்த காலிறுதி ஆட்டத்தில், ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோருடன் மோதினார் சாய்னா. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் 21-19 என்று சாய்னா வென்றார். அடுத்த செட்டை 18-21 என்று பறி கொடுத்தார். 2015ல் வெள்ளி வென்ற சாய்னா, மூன்றாவது செட்டை 21-15 என்று வென்றார். இதன் மூலம் 21-18, 18-21, 21-15 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதி்க்கு நுழைந்தார்.
முன்னதாக மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள சீனாவின் சன் யுன்னை 21-14, 21-9 என சுலபமாக வென்று, 4வது இடத்தில் உள்ள சிந்து, அரை இறுதிக்கு முன்னேறினார்.
அதே நேரத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கிடாம்பி ஶ்ரீகாந்த், காலிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தார். தரவரிசையில் முதலிடத்தில் உள்ள தென்கொரியாவின் சன் வான் ஹோ 21-14, 21-18 என்ற கணக்கில், தரவரிசையில் 8வது இடத்தில் உள்ள ஶ்ரீகாந்தை வென்றார்.
Story first published: Saturday, August 26, 2017, 17:55 [IST]
Other articles published on Aug 26, 2017


Click it and Unblock the Notifications