சிங்கிளாக நிற்கும் சிந்து.. சாய்னா, பிரனாய் அவுட்!
புசோவ்: சூப்பர் சீரியஸ் போட்டியான சீன ஓபன் பாட்மின்டன் போட்டியின் காலிறுதிக்கு பி.வி. சிந்து முன்னேறினார். காயம் காரணமாக கிடாம்பி ஸ்ரீகாந்த் பங்கேற்காத நிலையில், சாய்னா நெஹ்வால், எச்.எஸ். பிரனாய் ஆகியோர் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறினர்.
பாட்மின்டன் போட்டிகளில், ஒவ்வொரு ஆண்டும், சூப்பர் சீரியஸ் பிரிவின் கீழ், 13 ஓபன் போட்டிகள் நடக்கின்றன. தற்போது சீன ஓபன் போட்டிகள் தற்போது, சீனாவின் புசோவ் நகரில் நடக்கிறது.

சமீபத்தில் உலக தரவரிசையில் 2வது இடத்தைப் பிடித்த கிடாம்பி ஸ்ரீகாந்த் காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்பால் இந்தப் போட்டியில் விளையாடவில்லை.
பி.வி. சிந்து, சாய்னா நெஹ்வால், எச்.எஸ். பிரனாய் ஆகிய முன்னணி வீரர்கள் பங்கேற்பதால், சீன ஓபனில் இந்தியாவுக்கு பட்டங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த ஆண்டில் சூப்பர் சீரியஸ் பிரிவில் இதுவரை நடந்துள்ள 10 ஓபன் போட்டிகளில் இந்தியாவுக்கு, 7 பட்டம் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், நேற்று நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில், சீனாவின் ஹான் யுவேவை 21-15, 21-13 என்ற கணக்கில் வென்று, காலிறுதிக்கு பி.வி. சிந்து முன்னேறினார்.
அதே நேரத்தில், சமீபத்தில் சீனியர் தேசிய பாட்மின்டன் பட்டம் வென்ற சாய்னா நெஹ்வால், எச்.எஸ். பிரனாய் இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்தனர்.
சாய்னா நெஹ்வால், ஜப்பானின் அகானே யாமகூச்சியிடம்,18-21, 11-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இருவரும் இதுவரை 5 முறை சந்தித்துள்ளனர். அதில், நான்கு முறை ஜப்பான் வீராங்கனை வென்றுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்றாவது முறையாக யாமகூச்சியிடம் சாய்னா தோல்வியடைந்துள்ளார்.
உலகத் தரவரிசையில் 11வது இடத்தில் உள்ள எச்.எஸ். பிரனாய், 53வது இடத்தில் உள்ள ஹாங்காங்கின் சேக்யூ லீயிடம் தோல்வியடைந்தார். ஹாங்காங் வீரர் 21-19, 21-17 என்ற கணக்கில் வென்றார்.
Story first published: Friday, November 17, 2017, 18:53 [IST]
Other articles published on Nov 17, 2017


Click it and Unblock the Notifications