டெல்லி: இந்தோனேசியன் ஓபன் பாட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்த சாய்னா நெஹ்வாலுக்கு இந்திய அரசு ரூ. 2 லட்சம் பரிசு அளித்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. இது இந்திய அரசு கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற விளையாட்டுக்களை மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடத்தி வருவதை மீண்டும் உறுதி செய்துள்ளது.
பாட்மின்டன் உலகில் சீனாவின் ஆதிக்கத்தை உடைத்து இந்தியாவின் பெருமையை பறைசாற்றி வரும் இளம் வீராங்கனை சாய்னா நேவால். நேற்று முன்தினம் நடந்த இந்தோனேசியன் ஓபன் தொடரில் பெண்கள் ஒற்றையரில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையை வீழ்த்தி சாய்னா சாம்பியன் பட்டம் வென்றார்.
இதையடுத்து அவருக்கு மத்திய அரசு பரிசு வழங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் ஒப்புக்கு ரூ. 2 லட்சத்தை பரிசாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.
இதுவரை எந்த இந்திய வீராங்கனைகளாலும் வெல்ல முடியாத இரண்டு சூப்பர் சீரியஸ் பட்டங்களை வென்றிருக்கும் இவருக்கு கொடுக்கப்பட்ட பரிசு தொகை மிகவும் குறைவு.
இந்த வெற்றிகளுக்கு பின்னால் சாய்னாவின் திறமை மட்டுமில்லாது அவரது பயிற்சியாளரும், முன்னாள் ஆல்-இங்கிலாந்து சாம்பியனுமான கோபி சந்தின் கடுமையான முயற்சியும் இருக்கிறது. இவர்கள் அனைவரின் ஒட்டுமொத்த உழைப்புக்கும் கொடுக்கப்பட்ட இந்த சிறிய பரிசு பாட்மின்டன் வீரர்களின் நம்பிக்கையை தளர செய்துவிடலாம்.
இது கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற விளையாட்டு வீரர்களுக்கு போதிய பரிசோ, ஊக்கத்தொகையோ அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை தற்போது மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலை இனிமேலும் தொடரக்கூடாது. மற்ற விளையாட்டை சேர்ந்தவர்களுக்கு அரசு பாராபட்சமில்லாமல் உதவ வேண்டும்.