ஹைதராபாத்: உலக கோப்பை பாட்மின்டன் தொடரை சீர்குலைக்க லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு சதி திட்டம் தீட்டியிருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லாமல் இத்தொடர் சிறப்பாக நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியளித்துள்ளார்.
உலக கோப்பை பாட்மின்டன் தொடர் நாளை ஹைதராபாத்தில் துவங்கி வரும் 16ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில் இந்த தொடரை சீர்குலைக்க பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் சதி திட்டம் தீட்டியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
லஷ்கர் அமைப்பு உலக கோப்பை பாட்மின்டன் தொடர் நடக்கும் ஹைதராபாத், டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களை குறிவைத்திருப்பதாக தெரிகிறது.
மேலும், ஆகஸ்ட் 15ம் தேதி நடக்கவிருக்கும் சுதந்திர தின நிகழ்ச்சிகளையும் சீர்குலைக்கும் நோக்கில் சில தீவிரவாதிகள் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந் நிலையில் இது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்,
உலக கோப்பை பாட்மின்டன் தொடர் முழு பாதுகாப்புடன் நடக்கும். பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு திருப்தி அளிக்கிறது. முழு உஷாருடன் செயல்படுமாறு ஆந்திரா போலீசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் தாக்குதல் நடத்தலாம் என்று தான் உளவுத்துறை தெரிவித்துள்ளது. பாட்மின்டன் தொடருக்கு ஆபத்து என குறிப்பிட்டு இதுவரை எந்த தகவலும் இல்லை. என்றாலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் வீரர், வீராங்களை தயக்கமின்றி போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.
இங்கிலாந்து விலகல்...
இந் நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து அணி இந்த தொடரில் இருந்து விலகுவதாக அந்த அணியின் இயக்குனர் இயான் மோஸ் தெரிவித்துள்ளார். அவருக்கு கருத்துக்கு வீரர், வீராங்கனைகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மோஸ் கூறுகையில், வீரர்களின் பாதுகாப்பு தான் முக்கியம். எங்கள் வீரர்கள் சிறப்பாக பயிற்சி எடுத்திருந்தார்கள். என்றாலும் தீவிரவாத மிரட்டல் இருப்பதால் எங்கள் அணி உடனடியாக நாடு திரும்பும் என்றார் அவர்.