ஒலிம்பிக் பாட்மிண்டன்: வெண்கலம் வென்று சாதனை படைத்தார் சாய்னா நேவால்

உலகின் 2-ம் நிலை வீராங்கனையான சீனவின் ஜின் வாங்குடன் நேற்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சாய்னா நேவால் மோதினார். ஆட்டத்தின் தொடக்கம் முதல் ஜின்வாங் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இதனால் சாய்னா கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் 18-20 என்ற நிலையில் சாய்னா நெருங்கிக் கொண்டிருந்தார்.
ஜின்வாங்குக்கு காயம்
முதல்செட்டின் இறுதி நேரத்தில் மிக வேகமாக ஆடிய ஜின்வாங்குக்கு இடதுமூட்டில் காயம் ஏற்பட்டது. இதற்கு அங்கேயே சிகிச்சை பெற்ற ஜின்வாங் மீண்டும் ஆடுகளத்துக்குள் தமது வேகத்தைக் காட்டினார். 21-18 என்ற கணக்கில் ஜின்வாங் முதல்செட்டை தமது வசமாக்கிக் கொண்டார்.
ஆனால் 2-வது செட்டை ஜின்வாங்கால் தொடர முடியவில்லை. காயமடைந்த இடத்தில் கடுமையான வலி இருந்த காரணத்தால் அவரால் 2-வது செட்டை ஆட முடியாமல் போட்டியிலிருந்தே வெளியேறினார்.
முதல் செட்டை சாய்னா நேவால் இழந்திருந்தாலும் சீன வீராங்கனை ஆட்டத்தைத் தொடராத காரணத்தால் வெண்கலப் பதக்கம் சாய்னாவுக்கு கிடைத்தது. சிறப்பாக ஆடியபோதும் காயத்தால் பதக்கத்தை இழந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார் ஜின் வாங்.
ரூ.1 கோடி பரிசு:
வெண்கலப் பதக்கம் வென்றுள்ள சாய்னாவுக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அரியாணா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா அறிவித்துள்ளார். சாய்னாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள ஹூடா, சாய்னாவின் சாதனை வளர்ந்து வரும் வீரர், வீராங்கனைகளுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். சாய்னா இப்போது ஹைதராபாதில் இருந்தாலும், அவரது சொந்த மாநிலம் அரியாணா. அதனாலேயே அவருக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசை வழங்கியுள்ளது அரியாணா அரசு.
சாய்னா கருத்து
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றது குறித்து கருத்து தெரிவித்த சாய்னா, நான் பதக்கம் வென்றதை நம்ப முடியவில்லை. போட்டி கடுமையாக இருந்ததால் பாட்மிண்டனில் இந்தியாவுக்கு பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் எனது கனவு இப்போது நிறைவேறியிருக்கிறது. ஒலிம்பிக்கில் இப்போது நான் வென்றுள்ள பதக்கம், இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், சிறந்த வீரர்களை உருவாக்குவதாகவும் அமையும் என்றார்.


Click it and Unblock the Notifications