
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவில் இருந்து 13 விளையாட்டுகளில் தொடர்புடைய 80 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் போட்டிக்காக இந்தியாவை சேர்ந்த 2 வீரர்களும், 3 வீராங்கனைகளும் களமிறங்க உள்ளனர். இதில் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், ஜூவாலா குட்டா, அஸ்வினி பொன்னப்பா, வி.டிஜூ, பி.காஸ்யப் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் களமிறங்க உள்ள ஜூவாலா குட்டா, அஸ்வினி பொன்னப்பா ஜோடி உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப்பதக்கம் வென்றது. மேலும் பாட்மிண்டன் உலகில் சிறந்த கலப்பு இரட்டையர் ஜோடியான இந்தியாவின் ஜூவாலா, வி.டிஜூ ஜோடி லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் களமிறக்கப்பட உள்ள பி.காஸ்யப், சீன வீரர்களின் தாக்குதலை இவர் எதிர்கொள்வாரா என்பது கேள்வி குறியாகவே உள்ளது.
சாய்னா நேவால்:
உலக பாட்மிண்டன் தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள சீன வீராங்கனை ஷியன் வாங் மற்றும் 3வது இடத்தில் உள்ள சூயிரை லி ஆகியோரை வீழ்த்தி 3வது முறையாக இந்தோனேசியா ஓபன் பட்டத்தை சாய்னா நேவால் வென்றுள்ளார். மேலும் 2வது முறையாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள சாய்னா நேவால், கடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் காலிறுதி வரை மட்டுமே முன்னேறியவர்.
கடந்த 4 ஆண்டுகளில் இந்தோனேஷியா பட்டத்தை ஹாட்ரிக்(2009, 2010, 2012) முறையில் வென்றுள்ளார். மேலும் கடந்த 2010ம் ஆண்டு சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் பட்டங்களை சாய்னா நேவால் வென்றுள்ளார்.
இது குறித்து சானியா நேவால் கூறியதாவது,
ஒலிம்பிக் போட்டி துவங்கும் முன் சிறப்பான பயிற்சியை முடிப்பது மிகவும் முக்கியம். ஒலிம்பிக் போட்டியை பொறுத்த வரை சீன வீராங்கனைகளால் எனக்கு கடும் சாவல் காத்திருக்கிறது. சீன வீராங்கனைகள் ஒவ்வொரு புள்ளிகளுக்காகவும், கடுமையாக உழைப்பார்கள் என்றார்.
இது குறித்து ஜூவாலா கூறியதாவது,
ஒலிம்பிக் போட்டியில் வேகமாக செயல்படும் வகையில் எனது எடையை குறைத்து வருகிறேன். உலக சாம்பியன்ஷிப் தொடரில் நான் வெண்கலப் பதக்கம் வென்றேன். அதே அரங்கில் தான் ஒலிம்பிக் போட்டியும் நடைபெற உள்ளது. எனவே ஒலிம்பிக் போட்டியிலும் என்னால் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன் என்றார்.
மேலும் லண்டனில் உள்ள ஒலிம்பிக் போட்டிகளான ஆடுகளங்களில் சாட்டில் அதிக வேகமாக செல்லும். ஆனால் வீரர்களால் வேகமாக இயங்க முடியாது. இதனால் போட்டி துவங்கும் முன்பே லண்டன் சென்று பயிற்சியில் ஈடுபட இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தீர்மானித்துள்ளனர்.