டோகியோ: ஜப்பான் ஓபன் பாட்மின்டன் தொடரில் மிகவும எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முதல் போட்டியிலே அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த உலக கோப்பை தொடரில் காலிறுதியில் தோற்று வெளியேறிய சாய்னா நேற்று துவங்கிய ஜப்பான் ஓபனில் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்று மதியம் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் அவர், சீனாவின் யானிஜியோ ஜியாங்கை எதிர்கொண்டார். இதில் சாய்னா முதல் செட்டை 15-21 என பறிகொடுத்தார். ஆனால், சுதாரித்து ஆடிய அவர் அடுத்த செட்டை 23-21 என வென்று அசத்தினார்.
இதையடுத்து மூன்றாவது சுற்று அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அதில் சாய்னா 14-21 என இழந்தார். இறுதியில் 15-21, 23-21, 14-21 என்ற செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
அதே போல் கலப்பு இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் ஜூவாலா குட்டா, டிஜூ ஜோடி 18-21, 12-21 என்ற செட்களில் தாய்லாந்தின் சுத்கத் பிரபகமோல், சாராளி துங்தாங்கம் ஜோடியிடம் தோற்றது.
காஷ்யப் வெற்றி...
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் காஷ்யப் பருபள்ளி 21-17, 12-21, 21-11 என்ற செட்களில் ஜப்பானின் டகுமா உடேவை வென்றார்.