
லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் 205 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவில் இருந்து 13 விளையாட்டுகளில் தொடர்புடைய 81 பேர் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் விளையாட்டில் பங்கேற்க உள்ள வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ள போட்டிகளின் பிரிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் 'குரூப்-இ' பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். உலகின் 4ம் நிலை வீராங்கனையான சாய்னா லீக் போட்டிகளில், 55வது இடத்தில் உள்ள பெல்ஜியம் வீராங்கனை லியானே, 65வது நிலையில் உள்ள சுவிட்சர்லாந்தின் சப்ரினா ஜாகுயட் ஆகியோருடன் மோத உள்ளார். அதேபோல 2ம் சுற்றில் 14ம் நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் யோ ஜி உடன் மோத உள்ளார்.
முதல் சுற்றில் சாய்னா நேவால் வெற்றிப் பெற்றால், காலிறுதி போட்டியில் டென்மார்க்கின் டின் பன் அல்லது ஜப்பானின் சையாகா சாடோ ஆகியோரில் யாராவது ஒருவருடன் சாய்னா நேவால் மோதலாம்.
இது குறித்து சாய்னா நேவால் கூறியதாவது,
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் முதல் சுற்று எளிதாக இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் அடுத்தடுத்து வரும் சுற்றுகள் கடினமாகி கொண்டே செல்லும். ஆனால் லீக் போட்டிகளில் கொரிய வீராங்கனைகளுடன் மோதாமல் இருப்பது பெரிய ஆறுதலாக உள்ளது என்றார்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜூவாலா கட்டா, அஸ்வின் போன்னப்பா ஜோடி 'குரூப் பி' பிரிவில் உள்ளனர். இந்த பிரிவில் வெற்றி பெற்றால், இந்திய ஜோடி 'லாஸ்ட்-8' சுற்றில் நுழைய முடியும்.
கலப்பு இரட்டையர் பிரிவில் ஜூவாலா கட்டா, டிஜூ ஜோடி, கடினமான 'குரூப்-சி' பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் இந்திய ஜோடி, கொரியா ஜோடியை எதிர்கொண்டு வீழ்த்த வேண்டியுள்ளது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பருபள்ளி கஸ்யாப், முதல் போட்டியில் பெல்ஜியம் வீரருடன் மோத உள்ளார்.