
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நேற்று பெண்களுக்கான பாட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் ஒற்றையர் பிரிவின் 'இ' பிரிவை சேர்ந்த இந்தியாவின் சாய்னா நேவால், பெல்ஜியத்தின் லினே டான் ஆகியோர் மோதினர். இது சாய்னாவுக்கு 2வது போட்டியாகும்.
இதில் துவக்கம் முதலே சிறப்பாக ஆடிய சாய்னா நேவால், முதல் செட்டை 9 நிமிடங்களில் 21-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
அதே உற்சாகத்துடன் 2வது சுற்றில் ஆடிய சாய்னா, 14 நிமிடத்தில் 21-14 என்ற செட் கணக்கில் வென்றார். இதன் மூலம் 23 நிமிடங்களில் பெல்ஜியம் வீராங்கனை லினோ டானை, 21-4, 21-14 என்ற நேர்செட்களில் இந்தியாவின் சாய்னா நேவால் வீழ்த்தினார்.
ஏற்கனவே தனது முதல் போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை சபரினா ஜேக்கட்டை 21-9, 21-4 என்ற செட் கணக்கில் அதிரடியாக வீழ்த்தியிருந்தார் சாய்னா என்பது நினைவிருக்கலாம். தற்போது 2வது போட்டியிலும் பிரமாதமாக வென்றுள்ள சாய்னா அடுத்து காலிறுதிக்கு முந்தைய நாக் அவுச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இரட்டையர் பிரிவு:
பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் நேற்று பி பிரிவை சேர்ந்த இந்தியாவின் ஜூவாலா கட்டா, அஸ்வினி ஜோடி, சீனாவின் யூ சின் செயின், வன் ஸிங் ச்சிங் ஜோடியை எதிர்கொண்டது.
பரபரப்பான இப்போட்டியில் முதல் செட்டில் கடுமையாக போராடிய இந்திய ஜோடி 25-23 என்று செட்டை கைப்பற்றியது. ஆனால் 2வது சுற்றில் சோர்ந்து போன இந்திய ஜோடி 16-21 என்று செட் கணக்கில் இழந்தது. ஆனால் 3வது சுற்றில் சுதாரித்து கொண்ட இந்திய ஜோடி 21-18 என்ற செட் கணக்கில் கைப்பற்றியது.
போட்டியின் முடிவில் இந்தியாவின் அஸ்வினி, ஜூவாலா ஜோடி 25-23, 16-21, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய ஜோடி அடுத்த சுற்றிற்கு தகுதி பெற்றது.