காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் சாய்னா

நேற்று தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியாவுக்கு ஏமாற்றமும், ஆறுதலுமாக இருந்தது.
துப்பாக்கிச் சுடுதல் பிரிவில், மகளிர் ஏமாற்றமளித்தனர். ஆடவர் பிரிவில் லேசான நம்பிக்கை பிறந்தது. ஜூடோவில் டோம்பி தேவி ஏமாற்றமளித்தார். வில் வித்தையில் பதக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
இந்த நிலையில், மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் சிறப்பாக ஆடி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
தன்னுடன் மோதிய ரஷ்ய வீராங்கனை எல்லா கரச்கோவை 21-9, 21-8 என்ற நேரடி செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார் சாய்னா.
ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இந்த வெற்றியைப் பெற்று அசத்தினார் நெஹ்வால்.
அடுத்த சுற்றில் உக்ரைனின் லாரிசா கிரைகாவை சந்தித்தார் சாய்னா. முதல் போட்டியைப் போல இது எளிதாக இல்லை. இருப்பினும் தனது திறமைகளை கொட்டி போட்டியில் வெற்றி பெற்றார் சாய்னா.
கிரைகாவின் கடும் சவாலை சமாளித்து 21-18, 21-10 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார் சாய்னா.
காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில், ஹாங்காங்கின் சென் வாங் மற்றும் ஸ்லோவேகியாவின் இவா ஸ்லெடேகோவா ஆகியோரில் ஒருவரை சந்திப்பார் சாய்னா.
குத்துச்சண்டையில் ஏற்ற - இறக்கம்
ஆடவர் குத்துச் சண்டைப் பிரிவில் விஜேந்தர் சிங், காம்பியாவின் ஜேக் போடாவை 13-2 என்ற கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆனால் 81 கிலோ பிரிவில் திணேஷ் குமார், அல்ஜீரியாவின் அப்தல்ஹபீத்திடம் மகா மோசமாக தோல்வியுற்றார். அப்தல் ஹமீதின் குத்துக்களால் திணறிப் போன திணேஷை, நடுவர் குறுக்கிட்டு காப்பாற்றி ஆட்டத்தை முடித்து வைத்தார்.
விஜேந்தர் அடுத்த சுற்றில் தாய்லாந்து வீரர் அங்கான் சோம்புபுவாங்கை சந்திக்கிறார்.
துப்பாக்கிச் சுடுதல் - பதக்க கனவு தகர்ந்தது:
இதற்கிடையே, துப்பாக்கிச் சுடுதலில் டிராப் பிரிவில் பதக்கம் பெறும் இந்தியாவின் கனவு தகர்ந்தது.
உலக சாம்பியன் மனவ்ஜித் சிங் சந்து மற்றும் மான்ஷெர் சிங் ஆகியோர் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறினர்.
பெய்ஜிங்குக்கு கிளம்புவற்கு முன்பே, ஒலிம்பிக்கில் சாதனை படைப்பேன் பதக்கம் வாங்கியே தீருவேன் என சவால் விட்டிருந்தார் மனவ்ஜித். ஆனால் அவர் பேசிய வேகத்தில் பாதியைக் கூட இங்கு அவரால் காட்ட முடியவில்லை.
இருவரும் ஏதாவது ஒரு பதக்கத்ைதப் பெறுவார்கள் என்று இந்தியா மிகவும் நம்பியிருந்தது. ஆனால் இருவருமே மிகவும் சாதாரணமான முறையில் தோல்வி அடைந்துள்ளனர். மான்ஷெர் தகுதிச் சுற்றில் 8வது
இடத்தைப் பெற்றார். மனவ்ஜித்துக்கோ 12வது இடம்தான் கிடைத்தது.
இதன் மூலம் டிராப் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு தகர்ந்து போனது.
வில்வித்தையில் ஏமாற்றம்:
வில்வித்தையில், இந்திய மகளிர் குழு பதக்க வாய்ப்பை இழந்துள்ளது.
இன்று நடந்த காலிறுதிப் போட்டியில், டோலா பானர்ஜி தலைமையிலான இந்தியக் குழு சீனாவிடம் 206-211 என்ற கணக்கில் தோல்வியுற்றது.
கடந்த 18 மாதங்களில் சீனாவை மூன்று முறை தோற்கடித்திருந்தது இந்தியா. ஆனால் ஒலிம்பிக்கிற்கும் மற்ற போட்டிகளுக்கும் உள்ள வித்தியாசத்ைத இன்று இந்திய வீராங்கனைகள் உணர்ந்தனர்.
இந்திய குழுவில் டோலா பானர்ஜி, போம்போய்லா தேவி, பிரனிதா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
குழுப் போட்டியில் இந்தியா தோற்றுள்ள நிலையில், தனி நபர் போட்டிகள் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் தொடங்குகின்றன. அதிலாவது இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications