உ.கோ.பாட்மின்டன்-2 ஆஸ்திரியா வீரர்கள் ஓட்டம்
ஹைதராபாத்: தீவிரவாத மிரட்டல், ஸ்வைன் பீதி காரணமாக உலக கோப்பை பாட்மின்டன் தொடரில் பங்கேற்க வந்திருந்த இரண்டு ஆஸ்திரிய வீரர்கள் சொல்லாமல், கொள்ளாமல் ஓட்டம் பிடித்துள்ளனர்.
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில் இத்தொடரை சீர்குலைக்க லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு முயற்சித்து வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி இத்தொடரில் இருந்து விலகி கொண்டது.
இவர்களை தொடர்ந்து தற்போது ஆஸ்திரிய வீரர்கள் இருவர் ஓட்டம் பிடித்துள்ளனர். ஆண்கள் இரட்டையர் போட்டியில் விளையாட வந்த ஜூர்கன் கொச், பீட்டர் சாவ்னர் என்ற அந்த இரு வீரர்கள், போட்டி அமைப்பாளர்களிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் நாடு திரும்பியுள்ளனர்.
ஆனால், ஆஸ்திரியாவை சேர்ந்த மைக்கேல் லான்ஸ்டைனர் என்ற வீரரும், அணியின் பயிற்சியாளர் டுவி கன்கோராவும் ஹைதராபாத்தில் தான் இருக்கின்றனர்.
இது குறித்து உலக பாட்மின்டன் சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில்,
போட்டியிலிருந்து விலகுவது அவர்களது சொந்த முடிவு. ஆனால், அவர்கள் அந்த தகவலை எங்களிடம் தெரிவித்துவிட்டு போயிருக்கலாம். அவர்கள் தீவிரவாத மிரட்டல் மற்றும் பன்றி காய்ச்சல் நோய்க்கு பயந்து இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றார்.


Click it and Unblock the Notifications