ஓடென்ஸ்: டென்மார்க் ஓபன் அரை இறுதியில் ஹாங்காங்கின் வாங்க் விங் கீ வின்சென்டை 21-18, 21-17 என்ற நேர் செட்களில் வென்று, பைனலுக்கு முன்னேறினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்.
டென்மார்க் ஓபன் போட்டியில் பி.வி. சிந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார். சாய்னா நெஹ்வால், எச்.எஸ். பிரனாய் காலிறுதி வரை முன்னேறினர். காலிறுதியில் உள்ளூர் ஹீரோவான, உலக சாம்பியன் விக்டோர் ஆக்சல்சானை வீழ்த்தினார் ஸ்ரீகாந்த்.

நேற்று இரவு நடந்த அரை இறுதியில், ஹாங்காங்கின் வாங்க் விங் கீ வின்சென்டை சந்தித்தார் ஸ்ரீகாந்த். 39 நிமிடங்கள் மட்டுமே நீடித்த அரை இறுதியில், 21-18, 21-17 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்று, கிடாம்பி ஸ்ரீகாந்த் பைனலுக்கு முன்னேறினார்.
இந்த ஆண்டில் இந்தோனேசியா ஓபன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வென்றுள்ள 25 வயதாகும் ஸ்ரீகாந்த், சிங்கப்பூர் ஓபனில் பைனல் வரை முன்னேறினார். இந்த ஆண்டில் மூன்றாவது பட்டத்தை வெல்வதற்கு தயாராக உள்ளார்.
மற்றொரு அரை இறுதியில் கொரியாவைச் சேர்ந்த 37 வயதாகும் லீ ஹூன், 25-23, 18-21, 21-17 என்ற கணக்கில் உலக தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள சகநாட்டவரான சான் வான் ஹூவை வென்றார். பைனலில் ஸ்ரீகாந்தை சந்திக்கிறார் ஹூன்.