சூப்பர் சீரிஸ் பைனலில் ஸ்ரீகாந்த், சிந்து!
டெல்லி: துபாயில் நடக்க உள்ள சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் பைனல்ஸ் போட்டிக்கு, இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளனர்.
பாட்மின்டன் போட்டிகளில், ஒவ்வொரு ஆண்டும், சூப்பர் சீரிஸ் பிரிவின் கீழ், 13 ஓபன் போட்டிகள் நடக்கின்றன. அதில் கடைசியாக சூப்பர் சீரிஸ் மாஸ்டர்ஸ் பைனல்ஸ் போட்டி துபாயில் நடக்க உள்ளது. டிசம்பர் 13 முதல் 17ம் தேதி வரை நடக்கும் இந்தப் போட்டியில், உலகின் தலை சிறந்த 8 வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

இந்த ஆண்டுக்கான சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் போட்டிக்கு, இந்தியாவில் இருந்து ஸ்ரீகாந்த், சிந்து தகுதி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டில் சூப்பர் சீரிஸ் பிரிவில் இதுவரை நடந்துள்ள 12 ஓபன் போட்டிகளில் இந்தியாவுக்கு, 7 பட்டம் கிடைத்துள்ளது. கிடாம்பி ஸ்ரீகாந்த் நான்கு பட்டங்களும், பி.வி.சிந்து 2 பட்டங்களும், சாய் பிரனீத் ஒரு பட்டமும் வென்றுள்ளனர்.
இதில் ஸ்ரீகாந்த், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஓபன் பட்டங்களை வென்றதுடன், உலகத் தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறினார். கடைசியாக நடந்த சீன ஓபன் மற்றும் ஹாங்காங் ஓபன் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை.
பி.வி. சிந்து, இந்திய ஓபன் மற்றும் கொரிய ஓபன் ஆகிய இரண்டு சூப்பர் சீரியஸ் பட்டங்களும் ஒரு கிராண்ட் பிரிக்ஸ் பட்டமும் வென்றார். அதைத் தவிர, உலக சாம்பியன் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்றார். உலகத் தரவரிசையில், சிந்து 2வது இடத்தில் உள்ளார்.
உலகின் தலை சிறந்த 8 வீரர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளதால், இந்தப் போட்டியில் பங்கேற்பது இருவரின் திறமைக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாகும்.
Story first published: Friday, December 1, 2017, 13:42 [IST]
Other articles published on Dec 1, 2017


Click it and Unblock the Notifications