தாய்லாந்து ஓபன் பாட்மின்டன்: அசால்ட்டாக காலிறுதிக்குள் நுழைந்த சிந்து, சாத்விக் - சிராக் ஜோடி!
பாங்காக்: பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக் - சிராக் ஜோடி ஆகியோர் அதிரடியாக விளையாடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர். முன்னதாக மகளிர் ஒற்றையர் பிரிவில் 2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, டென்மார்க் வீராங்கனை அமேலி ஷூல்சை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, வெறும் 28 நிமிடங்களில் 21-13, 21-15 என்ற நேர் செட்களில் மிகவும் எளிதாக வெற்றி பெற்றார்.
உலக தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள சிந்து, தனது காலிறுதி ஆட்டத்தில் தற்போதைய உலக சாம்பியனான ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொள்ள உள்ளார். இவர்கள் இருவரும் இதற்கு முன் நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் சிந்து 15 வெற்றிகளும், யமாகுச்சி 13 வெற்றிகளும் பெற்றுள்ளதால் இந்த காலிறுதி ஆட்டத்தில் அனல் பறக்கும் என உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் பிரையன் ஜெர்மி - முஹம்மது ஹைக்கல் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 21-12 என எளிதாக கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டிலும் அதிரடி காட்டி 21-19 என வெற்றி பெற்று காலிறுதிக்குள் கெத்தாக நுழைந்தது.
இவர்கள் அடுத்ததாக ஜப்பானின் தகுமி நோமுரா - யுய்ச்சி ஷிமோகாமி ஜோடியை அரையிறுதி வாய்ப்புக்காக எதிர்கொள்ள உள்ளனர். ஏற்கனவே 2019 மற்றும் 2024ல் இங்கு சாம்பியன் பட்டம் வென்ற அனுபவம் சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
மற்ற இந்திய வீரர்களைப் பொறுத்தவரை, ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், சிங்கப்பூரின் லோ கீன் யூவை 21-14, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தினார். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள லக்ஷயா சென், 21-16, 21-17 என சிங்கப்பூர் வீரரை வீழ்த்தினார். முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பின் களமிறங்கிய மாளவிகா பன்சோட், முதல் செட்டை இழந்தாலும் அடுத்த 2 செட்களில் போராடி வெற்றி பெற்று அசத்தினார்.
மற்றொரு இளம் வீராங்கனை தேவிக்கா சிஹாக் தனது தகுதிச் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், உலகின் 4ம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யூ பெயிடம் 1 மணி நேரம் 10 நிமிடங்கள் கடுமையாகப் போராடிய இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா 21-19, 13-21, 18-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது.


Click it and Unblock the Notifications
