உலக பாட்மிண்டன் சாம்பியன் இறுதிப் போட்டி.... தங்கம் வெல்வாரா பிவி சிந்து?
கிளாஸ்கோ: உலக பாட்மிண்டன் சாம்பியன் 2017 போட்டியில் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை பிவி சிந்து தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு தங்க பதக்கம் கிடைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டிகள் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து சீன வீராங்கனையான சன் யுவை எதிர்த்து ஆடினார். இப்போட்டியின் ஆரம்பம் முதலே நன்கு விளையாடிய பி.வி.சிந்து முதல் செட்டை 21 - 14 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார்.

முதல் செட்டை இழந்ததால் சீன வீராங்கனையான சன் யு சோர்ந்து போனார். இதைப் பயன்படுத்திக்கொண்ட சிந்து, 2-வது செட்டில் தனது தாக்குதலை தீவிரப்படுத்தினார். அவரது வேகத்துக்கு சீன வீராங்கனையால் ஈடுகொடுக்க இயலவில்லை. இதனால் இறுதியில் 21-9 என்ற புள்ளிக்கணக்கில் 2-வது செட்டை சிந்து கைப்பற்றினார்.
இதன்மூலம் 21-14, 21-9 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சிந்து, இறுதி போட்டியில் நுழைந்ததன் மூலம் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் அவருக்கு ஒரு பதக்கம் உறுதியாகிவிட்டது. அவர் தங்க பதக்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். முதல் செட்டை வெல்ல 22 நிமிடங்களும், இரண்டாவது செட்டை வெல்ல 47 நிமிடங்களும் சிந்து எடுத்துக் கொண்டார்.
ஆண்களுக்கான கால் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் சன் வான் 21-14, 21-18 என்ற செட்கணக்கில் ஸ்ரீகாந்தை வென்று அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து இந்தியாவின் சாய்னா நேஹ்வால் வெளியேற்றப்பட்டார். அரை இறுதியில் அவர் ஜப்பானின் நஸோமி ஓகுகராவிடம் தோல்வியைத் தழுவினார்.


Click it and Unblock the Notifications