வாலிபால் புலிகளுக்கு பிறந்த பேட்மிண்டன் சிங்கம் பிவி சிந்து... அர்ஜூனா விருது பெற்ற அப்பா...
ஹைதராபாத்: ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்திருக்கும் பிவி சிந்துவின் அப்பாவும் அம்மாவுமே 'வாலிபால்' விளையாட்டில் புலிகள்... சிந்துவின் தந்தை ராமண்ணா நாட்டின் உயரிய விளையாட்டு விருதுகளில் ஒன்றான அர்ஜூனா விருது பெற்றவரும் கூட...
ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு நேற்று காலை வெண்கலப் பதக்கம் பெற்று தந்தார் சாக்ஷி மாலிக். இந்த மகிழ்ச்சியின் உச்சமாக நேற்று இரவு மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டி அரை இறுதியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தினார் பிவி சிந்து.
இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் உலகின் முதல்நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொள்கிறார் பிவி சிந்து. எப்படியும் சிந்து இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்துவிடுவார் என்ற பெருநம்பிக்கை கோடானு கோடி இந்தியர்களிடம் இருக்கிறது.

வாலிபால் வீரர்கள்...
21-வயதில் சிந்து சாதிக்க பின்புலமாக இருந்தவர்கள் பெற்றோர் ராமண்ணாவும் விஜயாவும்தான்.. இருவருமே இந்திய வாலிபால் அணிக்காக விளையாடியவர்கள்... வாலிபால் மைதானத்திலேயே திருமணம் செய்து கொண்டவர்களும் கூட...

அர்ஜூனா விருது
அப்பா ராமண்ணா நாட்டின் உயரிய விளையாட்டு விருதுகளில் ஒன்றான அர்ஜூனா விருது பெற்றவர். தற்போது ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார்.

8 மாத விடுப்பு
இருவரும் வாலிபால் வீரர்களாக இருந்தபோதும் மகள் சிந்துவுக்கு பிடித்த பேட்மிண்டன் போட்டியில் அவரை தொடர்ந்தும் ஊக்கப்படுத்திவந்தனர். மகளின் ஒலிம்பிக் போட்டி பயிற்சிக்காக 8 மாதமாக விடுப்பு எடுத்திருக்கிறார் அப்பா ராமண்ணா.

தொடர்ந்த ஊக்கம்...
நாள்தோறும் காலை 4 மணிக்கு மகளை அழைத்துக் கொண்டு கோபிசந்த் அகாடமிக்கு சென்றுவிடுவாராம் ராமண்ணா. அம்மா விஜயாவும் மகள் ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறார்.
இப்படியான தொடர்ந்த ஊக்கங்களே சிந்துவை ஒலிம்பிக்கில் சாதிக்க வைத்திருக்கிறது... நிச்சயம் சிந்துவின் பெற்றோர்கள் முன்னுதாரமானவர்களே... எங்கள் மகள் தங்கப் பதக்கம் வெல்வாள் என்ற அவர்கள் நம்பிக்கை பொய்த்துப் போய்விடக் கூடாது!


Click it and Unblock the Notifications