தென் கொரிய வீரரை துவம்சம் செய்து தங்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் அங்குஷ் பங்கால்
நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் 80 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை இறுதிப்போட்டியில், இந்திய வீரர் அங்குஷ் பங்கால் தென் கொரிய வீரரை ஒருதலைப்பட்சமாக வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அவர் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
நகோயாவில் நடைபெற்ற ஆடவர் 80 கிலோ தங்கப் பதக்கத்திற்கான இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் அங்குஷ் பங்கால் தென் கொரியாவின் கிம் மின்சியோங்கை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக களமிறங்கிய அங்குஷ், துல்லியமான குத்துகளை விட்டு 5 நடுவர்களில் 4 நடுவர்களின் ஆதரவை பெற்று முதல் சுற்றை 4-1 என கைப்பற்றினார்.

2வது சுற்றில் கொரிய வீரரின் நீண்ட தூர குத்துகளை லாவகமாக குனிந்து தவிர்த்த அங்குஷ், மின்னல் வேகத்தில் எதிர்தாக்குதல் நடத்தினார். இதனால் 5 நடுவர்களும் 10-9 என ஒருமனதாக அங்குஷிற்கு புள்ளிகளை வழங்கி 5-0 என இந்த சுற்றை முழுமையாக வழங்கினர். கடைசி சுற்றிலும் பதற்றமின்றி நிதானமாக ஆடிய அங்குஷ், எதிராளிக்கு எந்த வாய்ப்பும் தராமல் ஆட்டத்தை முடித்தார்.
முடிவில் 4 நடுவர்கள் 30-26 என அங்குஷிற்கு ஆதரவாக தீர்ப்பளிக்க, 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று அங்குஷ் பங்கால் தங்கப் பதக்கத்தை வென்றார்.
இந்த தொடரில் ஒரு சுற்றில் கூட தோற்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவர் அங்குஷ் பங்கால். தொடக்க சுற்றுகளில் பஹ்ரைன் வீரர் ஹம்சா வோகலை 5-0 எனவும், தஜிகிஸ்தான் வீரர் சலிமோவை 5-0 எனவும் வீழ்த்தினார். அரையிறுதியில் 75 கிலோ பிரிவின் நடப்பு உலக சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் ஃபஸ்லிடின் எர்கின்போயேவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்திருந்தார்.
மகளிர் பிரிவில் லவ்லினா போர்கோஹெய்ன் மற்றும் பர்வீன் ஹூடா ஆகியோர் தங்கம் வென்றதைத் தொடர்ந்து, தற்போது ஆடவர் பிரிவில் இளம் புயல் அங்குஷ் பங்காலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை களத்தில் இந்திய அணிக்கு தங்க மகுடம் சூட்டிய அங்குஷ் பங்காலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications

