மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்.. சுயநலத்திற்காக எங்களை தூண்டினார் பபிதா போகத்.. சாக்ஷி மாலிக்!
மும்பை: பாஜக முன்னாள் எம்பி பிரிஜ் பூஷனுக்கு எதிரான மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்த வேண்டும் என்று முதலில் அணுகியதே பாஜகவின் பபிதா போகத் தான் என்று முன்னாள் வீராங்கனை சாக்ஷி மாலிக் குற்றம் சாட்டியுள்ளார். மல்யுத்த சம்மேளன தலைவராக வேண்டும் என்று ஆசையால், சுயநலமாக போராட்டத்தை நடத்த தூண்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
பாஜக முன்னாள் எம்பி-யும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷ்ன் சிங் மீது இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகளான சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சர்வதேச அளவில் கவனம் பெற்ற போராட்டத்தால், வினேஷ் போகத் மற்றும் சாக்ஷி மாலிக் இருவருக்கும் அதிகளவிலான ஆதரவு கிடைத்தது.

ஆனால் பிரிஷ் பூஷன் தன் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்து வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சாக்ஷி மாலிக் புதிய குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதில், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக வர வேண்டும் என்பதற்காக பபிதா போகத் போராட்டத்தை தூண்டினார். அவருக்கென்று ஒரு நோக்கம் இருந்தது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக வேண்டும் என்ற திட்டத்துடன் பபிதா போகத் செயல்பட்டார்.
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருந்ததாக சில செய்திகள் வெளியானது. ஆனால் முற்றிலும் தவறானது. இன்னும் சொல்லப் போனால், பாஜகவில் இருந்த பபிதா போகத் மற்றும் தீரத் ராணா இருவரும் தான் எங்களுக்கு ஹரியானாவில் போராட்டம் நடத்த அனுமதி பெற்று கொடுத்தனர். அதேபோல் போராட்டம் முழுமையாக பபிதா போகத்தின் வழிகாட்டுதலில் நடக்கவில்லை.
அவரின் பேச்சினை நாங்கள் யாரும் கண்களை மூடிக் கொண்டு கேட்கவில்லை.மல்யுத்த சம்மேளத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதை நாங்கள் நன்றாக அறிந்திருந்தோம். அதனால் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக ஒரு பெண் வந்தால், எங்களுக்கு சிக்கல்கள் புரிந்து கொண்டு செயல்படுவார் என்று கருதினோம். அதிலும் பபிதா போகத் போன்ற விளையாட்டு வீராங்கனையே தலைவராக வரும் பட்சத்தில், எங்களின் கோரிக்கைகள் சரியாக அணுகப்படும் என்று நினைத்தோம்.
ஆனால் எங்களை வைத்து இப்படியொரு திட்டத்தை செயல்படுத்துவார் என்று நினைத்திருக்கவில்லை. அவர் எங்களுடன் அமர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் அப்படி எங்களுடன் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.
Story first published: Tuesday, October 22, 2024, 13:24 [IST]
Other articles published on Oct 22, 2024


Click it and Unblock the Notifications