மைக் டைசன் குத்துச்சண்டை போட்டி எத்தனை மணிக்கு? இந்தியாவில் எந்த சேனலில் பார்க்கலாம்?
நியூயார்க்: உலகின் முன்னணி தலைசிறந்த குத்துச் சண்டை ஜாம்பவான்களில் ஒருவரான மைக் டைசனுக்கும், யூட்யூப் மூலம் பிரபலம் அடைந்த இளம் குத்துச்சண்டை வீரர் ஜேக் பாலுக்கும் இடையிலான போட்டி இன்று நடைபெற உள்ளது.
அமெரிக்க நேரப்படி நவம்பர் 15 அன்று இரவு எட்டு மணிக்கு, இந்திய நேரப்படி நவம்பர் 16 அன்று காலை 9.30 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை எந்த தொலைக்காட்சி சேனலிலும் பார்க்க முடியாது. நெட்ப்ளிக்ஸ்-இல் மட்டுமே இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பாகும்.

58 வயதான மைக் டைசனுக்கும், 27 வயதான ஜேக் பாலுக்கும் இடையிலான போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள குத்துச்சண்டை ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்தப் போட்டிக்கு முந்தைய நாளான இன்று நடந்த எடை சரிபார்ப்பு நிகழ்வின் போது மைக் டைசன், ஜேக் பாலை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மைக் டைசன் கடைசியாக 2020 ஆம் ஆண்டு கண்காட்சிப் போட்டி ஒன்றில் ராய் ஜோன்ஸ் ஜூனியருக்கு எதிராக விளையாடி இருந்தார். எனினும், அதிகாரப்பூர்வமாக அவர் ஒரு குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று 19 ஆண்டுகள் ஆகிறது.
கடைசியாக 2005 ஆம் ஆண்டு கெவின் மெக்பிரைட்-க்கு எதிராக விளையாடி இருந்தார். அதன் பின் அவர் குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார். தனது 20 வயதிலேயே முதல்முறையாக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டம் வென்று குத்துச்சண்டை உலகில் சாதனை படைத்திருந்த மைக் டைசன் நீண்ட இடைவெளிக்கு பின் தொழில் முறை குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஜேக் பால் 2020 ஆம் ஆண்டு முதல் குத்துச்சண்டை உலகில் தனக்கென தனி பெயரை பெற்று வருகிறார். அவர் தனது முதல் ஆறு போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல், வெற்றிகளை மட்டுமே கண்டு பெரும் ரசிகர் கூட்டத்தை ஈர்த்தார். இவர்கள் இருவருக்கும் இடையே 31 வயது வித்தியாசம் இருக்கிறது.
எனவே, மைக் டைசனுக்கு இந்த போட்டியால் ஏதேனும் உடல் அளவில் பாதிப்பு ஏற்படுமா? என்ற கவலை குத்துச் சண்டை ஆர்வலர்கள் மத்தியில் உள்ளது. முன்னதாக இதே போட்டி ஜூலை 20 அன்று நடைபெற இருந்தது. ஆனால், அதற்கு முன் மே மாதத்தில் மைக் டைசனுக்கு உடல் நலப் பிரச்சனைகள் ஏற்பட்டதால் அந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications