தங்கத்துடன் சிறந்த வீரரானார் விகாஸ் கிஷண்
சோபியா: காயம் காரணமாக சில மாதங்களாக விளையாடாமல் இருந்த விகாஸ் கிஷண், பல்கேரிய குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றதுடன், போட்டியின் சிறந்த வீரர் விருதையும் வென்று அசத்தினார்.
ஐரோப்பிய குத்துச்சண்டை போட்டியான, 69வது ஸ்டார்ன்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவின் சோபியா நகரில் நடந்தது. இதில் மகளிர் பிரிவில் 6 பதக்கங்கள் கிடைத்தன.

ஆடவர் பிரிவில் 5 பதக்கங்கள் ஏற்கெனவே உறுதியாகின. ஆடவர் 75 கிலோ எடைப் பிரிவு பைனலில் அமெரிக்காவைச் சேர்ந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற டிராய் இஸ்லேவை வென்று, தங்கம் வென்றார் விகாஸ் கிஷண்.
கடந்தாண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு விகாஸ் பெறும் முதல் பதக்கம் இதுவாகும். அத்துடன், பல்கேரியப் போட்டியின் சிறந்த வீரராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சிறப்பை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
விகாஸை தவிர, அமித் பங்கல், 49 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார். இதன் மூலம், இந்தாண்டு, இரண்டு தங்கம், மூன்று வெள்ளி, 6 வெண்கலப் பதக்கத்தை இந்திய அணி வென்றுள்ளது.
மகளிர் பிரிவில் மேரி கோம் மற்றும் சீமா புனியா வெள்ளி வென்றனர். எல். சரிதா தேவி, பாக்யபதி கசாரி, ஸ்வீட்டி போரா, மீனா குமாரி தேவி வெண்கலம் வென்றனர்
ஆண்கள் பிரிவில் கவுரவ் சோலங்கி, 52 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி வென்றார். முகமது ஹூசாமுதீன் 56 கிலோ எடைப் பிரிவிலும், சதீஷ்குமார் 91 கிலோவுக்கு மேற்பட்டோர் பிரிவிலும் வெண்கலம் வென்றனர்.
Story first published: Tuesday, February 27, 2018, 12:01 [IST]
Other articles published on Feb 27, 2018


Click it and Unblock the Notifications